சிங்கப்பூரின் CNA மற்றும் IPS எனப்படும் Institute of Policy Studies நடத்திய “இன உறவுகள்” பற்றிய ஆய்வின்படி, சிங்கப்பூரில் உள்ள அனைவரும் தங்கள் இனத்தை ஓர் பொருட்டாகக்கொள்ளாமல் செல்வந்தர்களாகவோ அல்லது வெற்றிபெறவோ முடியும் என்று பெரும்பான்மையானவர்கள் நம்பும் அதே வேளையில், சிங்கப்பூரில் இனவெறி ஒரு முக்கியமான பிரச்சினையாகவே உள்ளது என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (56.2 சதவீதம்) இனவெறி ஒரு முக்கியமான பிரச்சனை என்று கூறியுள்ளனர். இது கடந்த 2016ல் நடத்தப்பட்ட முந்தைய CNA-IPS கணக்கெடுப்பிலிருந்து சுமார் 46.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டிய முக்கிய நிகழ்வாகும்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட, இன உறவுகள் பற்றிய இரண்டாவது CNA-IPS கணக்கெடுப்பு 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 2,000 சிங்கப்பூர் குடியிருப்பாளர்களிடம் நடத்தப்பட்டது. சிங்கப்பூர் மக்கள் தொகையில் மட்டுமல்லாமல் 350 அல்லது அதற்கு மேற்பட்ட மலாய் மற்றும் இந்தியர்களும் இந்த கருத்துக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர், இதனால் அவர்களின் கருத்துக்களும் சரியான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
255 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், இனவெறி ஒரு முக்கியமான பிரச்சனையாக கருதுபவர்கள் 50 வயதிற்குட்பட்டவர்களாகவும், இரண்டாம் நிலைக்கு அப்பால் கல்வி கற்றவர்களாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் (88.8 சதவீதம்) அரசியல் தலைவர்கள் இனவெறியைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது முக்கியம் என்று கூறியிருந்தாலும், பாதிக்கும் மேற்பட்டவர்கள் (58.6 சதவீதம்) இதுபோன்ற பொதுப் பேச்சு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கருதுகின்றனர்.
இந்த கணக்கெடுப்பில் இந்திய (42.7 சதவீதம்) மற்றும் மலாய் மக்களை (47.8 சதவீதம்) ஒப்பிடும்போது, இனம் குறித்த இதுபோன்ற விவாதங்களில் சிங்கப்பூரில் உள்ள சிறுபான்மை இனத்தவர்கள் அதிக உணர்திறன் (Sensitive) கொண்டவர்களாக இருப்பதாக சீன நாட்டவர்கள் (54.9 சதவீதம்) கூறியுள்ளனர்.
மேலும் சிங்கப்பூரில் உள்ள கலாச்சாரங்களை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது யார் அதிக சலுகைகளை சிங்கப்பூரில் பெறுகிறார்கள் என்று மக்களிடம் கேட்டபோது “இங்கு பெரும்பான்மையாக வாழும் மக்கள் பெரிய அளவில் சிறப்பான சலுகைகள் பெறுகின்றார்கள் என்று பலர் நினைத்தாலும் அப்படி எதையும் அவர்கள் பெறுவதில்லை என்று 70 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
சிங்கப்பூர் வாழ் இந்தியர்களை பொறுத்தமட்டில் இங்கு இனவெறி என்பது குறைவாகவே உள்ளது என்றும், அனைத்து சமூகத்தினரும் இங்கு செல்வந்தர்களாக அல்லது நல்ல வெற்றியாளர்களாக முன்னேற முடிகின்றது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பலர் சிங்கப்பூரில் உயர் பதவிகளிலும், தொழில்களிலும் இருப்பதே அதற்கு சாட்சி.
இருப்பினும் இந்த ஆய்வின் முடிவில் கடந்த 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பை விட இனவெறி என்பது சிங்கப்பூரில் சற்று அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகிறது.