TamilSaaga

சிங்கப்பூரில் 470 பேரிடம் 85 லட்சம் டாலர் அபேஸ் : கேள்விக்குறியாகும் NET Banking பாதுகாப்பு – எச்சரிக்கைப் பதிவு!

சிங்கப்பூரின் இரண்டவாது பெரிய வங்கியான OCBC வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நடைபெற்ற மோசடியில் 470-க்கும் மேற்பட்டவர்கள் 85 லட்சம் சிங் டாலர்களை இழந்திருக்கிறார்கள். டிஜிட்டல் பேங்கிங் பாதுகாப்பு விஷயத்தில் எந்த அளவுக்குக் குறைபாடுகள் இருக்கின்றன என்பதை இந்த மோசடி வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது… பாதுகாப்புக்கு சிங்கப்பூர் அரசு என்ன செய்ய வேண்டும்?

“அந்த இந்திய செவிலியர் மகளை நினைத்து துடித்தார்” : சிங்கப்பூரில் உயரும் செவிலியர்களுக்கான தேவை – ஏன்? பெருந்தொற்று படுத்திய பாடு என்ன?

OCBC வங்கி மோசடி

கடந்த டிசம்பர் மாதத்தின் கிறிஸ்துமஸ் வாரத்தில் OCBC வங்கி வாடிக்கையாளர்களுக்குத் திடீரென எஸ்.எம்.எஸ்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. `உங்கள் இன்டர்நெட் பேங்கிங் பாதுகாப்பை உறுதி செய்ய, உடனடியாக லாக்-இன் செய்து பதிவு செய்துகொள்ளுங்கள்’ என்கிறரீதியில் லிங்க் ஒன்றோடு அந்த எஸ்.எம்.எஸ் வந்திருந்தது. OCBC வங்கியின் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியைப் போலவே வந்திருந்த அந்த எஸ்.எம்.எஸ் வாடிக்கையாளர்கள் யாருக்கும் சிறிதும் சந்தேகம் கிளப்பாத வகையில் ஒரிஜினலைப் போலவே இருந்திருக்கிறது. இதனால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அந்த லிங்கை கிளிக் செய்திருக்கிறார்கள். அந்த லிங்கும் OCBC வங்கியின் நெட் பேங்கிங் தளத்தைப் போலவே இருந்திருக்கிறது. இதனால், அந்தத் தளத்தில் தங்களது நெட் பேங்கிங் யூஸர் நேம், பாஸ்வேர்டுகளைக் கொடுத்து லாக்-இன் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அதன்பிறகுதான் வினையே தொடங்கியிருக்கிறது. அப்படி தங்கள் தகவல்களைக் கொடுத்து லாக்-இன் செய்ய முயற்சித்தவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் மொத்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது. 300, 400 டாலர்கள் தொடங்கி 5,00,000 சிங் டாலர்கள் வரை 470-க்கும் மேற்பட்ட மக்கள் 85 லட்சம் டாலர்களை இழந்திருக்கிறார்கள்.

இப்படி பணத்தை இழந்தவர்கள் சாமானியர்கள்தான் அதிகம். சிங்கப்பூரைச் சேர்ந்த 7 குழந்தைகளின் தாயான சிதி ரௌதாத் முகமது அலியின் வாழ்வில் 2021 டிசம்பர் 28 மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. OCBC வங்கி அனுப்பியதுபோல் மோசடிக் கும்பல் அனுப்பிய லிங்கை ஓப்பன் செய்து, தனது வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் அவர் தனது குழந்தைகளின் கல்விச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த ஒரு லட்சம் சிங் டாலர்களும் வேறொரு கணக்குக்கு மாற்றப்பட்டதாக அடுத்த எஸ்.எம்.எஸ் வந்திருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ந்துபோன அவர், அப்படியே உறைந்து போயிருக்கிறார். இதேபோல்தான், தங்கள் குடும்பத்தின் எதிர்கால செலவுகளுக்காகச் சேமித்து வைத்திருந்த நடுத்தர மக்கள் பலரின் சேமிப்புகளையும் மோசடி கும்பல் கபளீகரம் செய்திருக்கிறது.

பாதுகாப்புக் குறைபாடு

இப்படி ஏமாந்தவர்கள் ஒருபுறமிருக்க, திடீர் மோசடி குறித்து வங்கியிடம் புகார் தெரிவிக்க முயன்றவர்களின் நிலை அதைவிடப் பரிதாபம். பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை சில நிமிடங்களில் இழந்த பலர், இதுகுறித்து OCBC வங்கியின் கஸ்டமர் கேரைத் தொடர்புகொண்டு புகார் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், அந்த திக் திக் சூழலில் அவர்கள் 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய கடுமையான நிலை ஏற்பட்டிருக்கிறது. கற்பனை செய்து பாருங்கள் உங்களின் மொத்த சேமிப்பையும் பறிகொடுத்துவிட்ட அந்தத் தருணத்தில் 20 நிமிடங்களை அவர்கள் எப்படிக் கடந்திருப்பார்கள் என்று..! இதனால், மனரீதியாகப் பாதிக்கப்பட்டு பலரும் மருத்துவர்களின் உதவும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது சோகமான உண்மை.

மோசடி எழுப்பும் கேள்விகள்

OCBC வங்கி மோசடி சிங்கப்பூரில் ஆன்லைன் பேங்கிங் பாதுகாப்பில் எவ்வளவு குறைபாடுகள் இருக்கின்றன என்பதை அப்பட்டமாக முகத்தில் அறைந்தால் போல் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இதுபோன்ற மோசடிகளில் இருந்து பாதுகாப்புக் கொடுப்பது ஒவ்வொரு வங்கியின் தார்மீகப் பொறுப்புதான். அதற்காகத்தான் குறிப்பிட்ட வங்கியை நம்பி, தங்களின் எதிர்காலத்துக்காக சேமித்த பணத்தை மக்கள் போட்டு வைக்கிறார்கள். ஆனால், வங்கிகள் அந்த பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டிருக்கின்றன என்பதுதான் களநிலவரம். இந்த எஸ்.எம்.எஸ் மோசடியின் பணத்தை இழந்த 470-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், அவர்கள் இழந்த பணத்தை வழங்க இருப்பதாக OCBC வங்கி அறிவித்திருக்கிறது. அதன்படி இதுவரை 100-க்கும் மேற்பட்டோருக்குப் பணத்தை அந்த வங்கி திரும்ப வழங்கியிருக்கிறது.

இது அவர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி கொடுக்கும் என்றாலும், நெட் பேங்கிங் மீதான பயத்தை இந்த நடவடிக்கை மட்டுமே போக்கிவிடாது. குறிப்பாக பெருந்தொற்று காலமான தற்போதைய சூழலில் தங்களின் எல்லா பண பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாகச் செல்வது என்பது இயலாத காரியம் மட்டுமல்ல; பாதுகாப்பான செயலும் அல்ல. குறிப்பிட்ட வங்கியின் பெயரால் மோசடிக் கும்பல், அதேபோல் எஸ்.எம்.எஸ் அனுப்ப முடிந்தது எப்படி? இதுபற்றி புகார் தெரிவித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், ஜனவரி முதல் வாரத்தில் பணத்தை இழந்த வாடிக்கையாளர்களை அந்த மோசடியில் இருந்து காப்பாற்றியிருக்கலாம். ஏன் வங்கி நிர்வாகம் அதைச் செய்யவில்லை? போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

நாணய நிதியத்தின் நடவடிக்கை

இந்த மோசடி சிங்கப்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சிங்கப்பூர் நாணய நிதியம் மற்றும் அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு லிங்குகளைக் கொண்ட மெசேஜ்களை அனுப்பப் போவதில்லை என்று தற்காலிகமாக முடிவெடுத்திருக்கின்றன.

அதேபோல், SMS Registry என்ற புதிய முன்னெடுப்பும் தொடங்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக மெசேஜ்கள் அனுப்பும் வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்கள் இதில், தங்களைப் பதிவு செய்துகொண்ட பிறகு அப்படியான குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும். அதேபோல், இந்த வலையிணைப்பில் செல்போன் சேவை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்களும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இதனால், மோசடி எஸ்.எம்.எஸ்-கள் அனுப்ப முடியாத நிலை ஏற்படுத்தப்படும் என சிங்கப்பூர் நாணய நிதியம் நம்புகிறது.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

இதுபோன்ற மோசடிகள் நடப்பது இது முதல்முறையல்ல; இதுவே கடைசியாகவும் இருக்கப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம். இதுபோன்ற மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள சைபர் செக்யூரிட்டி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். சிங்கப்பூர் பொது சுகாதாரத் துறையில் இதேபோன்ற எஸ்.எம்.எஸ் மோசடி நடந்தபோது, அப்படியான குறுஞ்செய்திகளை அனுப்பியது யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“எவ்வளவு கூப்பிட்டும் கண்விழிக்கவில்லை” : சிங்கப்பூரில் காரில் சடலமாக கிடந்த 67 வயது ஓட்டுநர் – போலீசார் விசாரணை

சுகாதாரம் மற்றும் கல்வித் துறைதான் இதுபோன்ற மோசடிகளின் முதல் இலக்காக இருக்கின்றன என்கிறது ஒரு ஆய்வு முடிவு. எஸ்.எம்.எஸ், இ-மெயில், சமூக வலைதள கணக்குகளைக் குறிவைத்து இந்த மோசடிகள் நடக்கின்றன. இதனால், அதுபோன்று தங்களின் கணக்குகளுக்கு வரும் தகவல்களைக் கையாளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை விழிப்புணர்வை எல்லா தரப்பு மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இப்போதைய தலையாய கேள்வி. ஆனால், அப்படியான விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்தப் போகிறோம்.. இதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது போன்ற கேள்விகளுக்கு அரசு உடனடியாகப் பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும். அத்தோடு, உடனடியாக கல்வி நிறுவனங்கள், நிதி அமைப்புகள், சுகாதாரத் துறையினருக்கான வழிகாட்டுதல்களை நிபுணர் குழுவுடன் இணைந்து உருவாக்கி, அதுபற்றி விழிப்புணர்வையும் பரவலாக்க வேண்டும் என்கிறார்கள் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள். அதேபோல், இதுபோன்ற மோசடி குறித்து புகார் எதுவும் பெறப்பட்டால், உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்யும்படியான Rapid Response Team-ஐயும் கட்டமைக்க வேண்டும். மேலும், சைபர் செக்யூரிட்டியை அதிகப்படுத்த உலகத் தரத்திலான பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த வேண்டும். டிஜிட்டல் துறை அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வரும் இந்த தருணத்தில், அந்த உலகில் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டியது அரசின் முதன்மையான கடமையும் கூட..!

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts