சிங்கப்பூரில் உணவு விநியோகிக்கும் ஊழியர்கள் சமீப காலமாக அதிக அளவு விபத்தில் சிக்கி வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் உயிரிழந்து விடுகின்றனர். இந்நிலையில், Food Delivery ஊழியர்களின் வருமானம் மற்றும் எதிர்காலம் குறித்து Institute of Policy Studies (IPS) ஆய்வு அறிக்கை ஒன்றை நேற்று (நவ.4) வெளியிட்டுள்ளது.
அதில், “சிங்கப்பூரில் உணவு டெலிவரி செய்பவர்களில் நான்கில் ஒருவருக்கு மட்டுமே சேமிப்பு என்பது உள்ளது. அதாவது திடீரென அவர்களுக்கு வேலை பறிபோனாலோ அல்லது விபத்தில் சிக்கி வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டாலோ, அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்பத் தேவைகளைக் கவனித்துக்கொள்ள போதுமான சேமிப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால், எல்லோரிடமும் அப்படி சேமிப்பு இருப்பதில்லை. இன்று படுத்தால் நாளைக்கு ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காத நிலையில் தான் உள்ளார்கள் என்று IPS தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வை டாக்டர் மேத்யூ மேத்யூஸ், திருமதி தியன் வென் லி, திருமதி கிளாரா லீ, திருமதி ஷாமில் ஜைனுடின் மற்றும் திருமதி மிண்டி சோங் ஆகியோர் மேற்கொண்டனர்.
சரியாக 1,002 உணவு டெலிவரி ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 21 முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் இந்த ஆய்வில் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
பதிலளித்தவர்களில் ஐந்தில் மூவருக்கும் அதிகமானோர் (62.9 சதவீதம்) தங்களது சொந்த செலவுகள் மற்றும் குடும்பத்தின் செலவுகளுக்கே சம்பாதிக்கும் பணம் தீர்ந்துவிடுகிறது. இதனால், எங்களால் சேமிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.
அதேபோல், வீட்டுக் கடன், வெளியில் வாங்கிய கடன் என்று கடன்களுக்கே முக்கால்வாசி பணம் போய்விடுகிறது என்றும் கூறியுள்ளனர்.
ஒரு வாரத்திற்கு 51 மணிநேரம் மற்றும் அதற்கு மேல் வாகனம் இயக்கும் ஊழியர்களில் 38.3 சதவீதம் பேர் குறைந்தது ஒரு விபத்தையாவது சந்தித்து இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.