TamilSaaga

11 வருட உழைப்பு… கிடைத்த வேலையை தூக்கிப் போட்டு.. 33 வயதில் சிங்கப்பூரில் “ஒன்பது” கடைகளுக்கு முதலாளி ஆன தமிழன்! அருகில் இருந்து பார்த்து மனம் குளிரும் தாய்!

சிங்கப்பூரின் Boon Lay பகுதியில், “The Original Vadai”கடையின் ஒன்பதாவது கிளை திறக்கப்பட்டுள்ளது. இன்று (நவ.4) முதல் இந்த கிளை ஓபன் செய்யப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு, இன்றிய ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இலவச இறால் வடை வழங்கப்படும் என்றும், தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க, ஒருவருக்கு ஒரு வடை மட்டுமே தரப்படும் என்றும் அந்த கடையின் சமூக தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் ஃபேவரைட் ஸ்நாக்ஸ் ஐட்டத்தில் ஒன்றான வடையை, சிங்கப்பூரில் இன்னும் ஏகப்பட்ட வகைகளில் அறிமுகம் செய்த, ‘தி ஒரிஜினல் வடை’ கடை திறக்கப்பட்டதற்கு முன்னால் ஒரு நெகிழ வைக்கும் உண்மை சம்பவம் இருக்கிறது.

ஆம்! சிங்கப்பூரில் வசிக்கும் 33 வயதான சூர்யா செல்வராஜா என்பவரின் குடும்பத்தினர், கடந்த 30 வருடங்களாக ‘தி ஒரிஜினல் வடை’ எனும் உணவகத்தை சிங்கப்பூரில் நடத்தி வருகின்றனர். இத்தனை வருடங்களாக அவரது தாய் யமுனா ராணி அந்த கடையை வெற்றிகரமாக நடத்தி வந்த நிலையில், பெருந்தொற்று காலத்திற்கு முன்பு தான், சூர்யா அதற்கு பொறுப்பேற்று நடத்தத் தொடங்கினார். ஆனால், அதற்குள் தொற்று உலகம் முழுவதையும் முடக்க, சூர்யாவும் செய்வதறியாது நின்றார்.

அப்போது தான் ரமலான் நோன்பு மாதம் கைக்கொடுத்தது. ரமலான் நேரத்தில், கெயிலாங் செராய்யில், தனது தலைமையில் முதன் முதலாக கடையை சூர்யா திறந்தார். மசால் வடை, உளுந்து வடை என்ற பாரம்பரியமான இந்திய வடையை கொஞ்சம் மாற்றி, இறால் வடைகளை விற்கத் தொடங்கிய முன்னோடிகளில் இவரது தாயாரும் ஒருவர்.

இடையில் பல வேலைகளில் ஈடுபட்ட சூர்யா, 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொழிலில் முழுமையாக இறங்க முடிவு செய்தார். அப்போதிலிருந்தே வியாபாரத்தை மேம்படுத்த பல வழிகளை ஆராய்ந்து வருகிறார். சீஸ் வடை உள்ளிட்ட பல்வேறு வகையான வடைகளை சூர்யா அறிமுகம் செய்துள்ளார். ஆனால், எல்லாவற்றையும் விட இறால் வடைக்கு தான் கூட்டம் அலை மோதுகிறது.

இடையில், புரோட்டா, சாதம் உள்ளிட்டவற்றை விற்க முயன்ற சூர்யாவுக்கு தோல்வியே மிஞ்சியது. இதனால் கிட்டத்தட்ட ரூ.300,000 டாலர் வரை இவருக்கு இழப்பு ஏற்பட்டது.

இளம் வயதில் தாயாருடன் சேர்ந்து வடை விற்றதால் சூர்யாவும், அவரது தாயும் கேலி, கிண்டலுக்கு ஆளானார்கள். சிறு வயது முதலே தன் அம்மாவுக்கு உதவியாய் இருந்து வரும் சூர்யா, தன் கண் முன்னாலேயே மற்றவர்கள் கிண்டல் செய்வதை பார்க்க நேரிட்டது. அப்போதில் இருந்தே, தன் தாய் தொடங்கிய இந்த வியாபாரத்தை பெரியளவில் விஸ்தரிக்க வேண்டும் என்பதே, சூர்யாவின் நோக்கமாக இருந்தது. இன்று அதை சாதித்தும் காட்டியுள்ளார்.

சிறு வயதில் எண் 32, ஜு சியாட் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் தாயாருடன் இறால் வடைகளை விற்ற சூர்யா, தனது கடுமையான உழைப்பின் மூலம் அதே இடத்தில் பெரிய வடைக் கடையை திறந்தார்.

பிறகு, Geylang Serai Market and Food Centre-ல் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது எட்டாவது கடையை திறந்த நிலையில், இன்று (நவ.4) தனது ஒன்பதாவது கிளையை Boon Lay பகுதியில் திறந்துள்ளார்.

தமிழ் சாகா சிங்கப்பூர் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சூர்யா!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts