TamilSaaga

இதயத்தில் 100% அடைப்பு.. கடைசி நேரத்தில் தமிழரின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள் – வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை!

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழரின் உயிரை காப்பாற்றிக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

தினமும் இரண்டு மணி நேரம் பேட்மிண்டன் விளையாடும் உடல் சுறுசுறுப்பான இந்தியரான ராஜ்குமார் ராஜேந்திரனுக்கு தூக்கத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து துபாயின் Qusais-ல் உள்ள ஆஸ்டர் மருத்துவமனையின் மருத்துவர்கள், அவருக்கு இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் ஐந்து தமனிகளில் கடுமையான அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

பிறகு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராஃபி எக்ஸ்ரே சோதனையில், 41 வயதான அந்த நபருக்கு மூன்று கரோனரி தமனிகளில் கிட்டத்தட்ட 100 சதவீதம் அடைப்பு மற்றும் இரண்டு கிளை தமனிகளில் பாதியளவு அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு செப்டம்பர் 23 அன்று மருத்துவமனையில் உயிர் காக்கும் கரோனரி தமனி பைபாஸ் கிராஃப்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு இப்போது தனது வீட்டில் வசித்து வரும் ராஜேந்திரன், தமனியில் பல அடைப்புகள் இருப்பது பற்றி மருத்துவர் சொன்னபோது, எனது காதுகளை என்னாலேயே நம்ப முடியவில்லை என்று கூறினார். இதுகுறித்து அவர், “நான் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தேன், தினமும் இரண்டு மணி நேரம் எனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடினேன். நான் ஆரோக்கியமாக இருந்தேன். கடைசியாக நான் எப்போது மருந்து சாப்பிட்டேன் என்பது கூட எனக்கு நினைவில்லை. அவ்வளவு ஆரோக்கியமாக உடலை வைத்திருந்தேன்” என்றார்.

மேலும் படிக்க – “எவ்வளவு திமிர்”! சிங்கப்பூரில் டிராஃபிக் போலீஸை… அப்படியே இழுத்துப் பிடித்து தரதரவென காரில் இழுத்துச் சென்ற நபர்.. வெளியான வீடியோ

தூக்கத்தின் போது எனது மார்பு மற்றும் முதுகில் வலி இருப்பதை உணர்ந்தேன். அந்த வலி இரண்டு நிமிடங்கள் நீடித்தது.உடனே எழுந்து என் படுக்கையில் அமர்ந்தேன். ஆனால் பின்னர் வலி மறைந்துவிட்டது. அடுத்த நாள், நான் இதைப் பற்றி என் சகோதரனிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் ஒரு மருத்துவரை அணுக சொன்னதையடுத்து, நாங்கள் அருகிலுள்ள கிளினிக்கிற்குச் சென்றோம். அதன் பிறகு தான் எனக்கு இவ்வளவு பெரிய பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், “அறுவைசிகிச்சை நன்றாக நடந்ததில் நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம். கொஞ்சம் கவலைப்பட்டோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக, எல்லாம் நல்லபடியாக நடந்தது. காயங்கள் குணமாகி வருகிறது, இன்னும் சிறிது நேரத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.

சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர்களே… நீங்கள் சம்பாதிப்பதை விட முக்கியமானது உங்கள் உடல் நலன். ஆகையால். ராஜேந்திரன் சொல்வது போல் நன்றாக ஃபிட்டாக இருப்பவர்களுக்கு கூட எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால், வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மறக்காமல் செய்யுங்கள். உங்களை நம்பி ஒரு குடும்பம் கடல் கடந்து காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts