TamilSaaga

“தண்டனைக்காக சிங்கப்பூர் சிறைச்சாலையில் காத்திருக்கும் இந்தியர்” : என்ன நடந்தது? – முழு விவரம்

சிங்கப்பூரில் ‘அதிகாரப்பூர்வ ரகசிய சட்டப்பிரிவின்’ கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்காலிகமாக 25 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் பஞ்சாபைச் சேர்ந்த தமன் தீப் சிங்.

இருபத்தி மூன்று வயதாகும் தமன் தீப் சிங் மீது குடியிருப்பு பகுதியினை கீழ் குத்தகைக்கு விட்டது, அதிகாரப்பூர்வ சோதனை பற்றி முன்னரே அறிவித்தது, என்னும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, முதல்கட்டமாக அவரை 25 நாட்கள் சிறையில் அடைத்திருக்கிறது சிங்கப்பூர் காவல்துறை.

எங்கிருந்து இவருக்கு இதுபோன்ற தைரியமும், தகவல்களும் கிடைத்தன? என்று கேள்வி எழுப்பும் போது இந்த வழக்கின் சுவாரசியமான ஆரம்ப கட்டத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது.

ஆரம்பத்தில் எல்லாரையும் போல வேலை தேடி வெளிநாட்டுக்கு சென்றவர்தான் தமன் தீப் சிங். 2017 அவர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியை மேற்பார்வையிட வந்த வீட்டுவசதி வாரிய அதிகாரி கலையரசன் கருப்பையாவை சந்தித்த பிறகு இதுபோன்ற எதிர்மறை யோசனைகளும் விபரீதமான சிந்தனைகளும் அவருக்கு தோன்றியிருக்கின்றன என்னும் படிதான் நடந்திருக்கிறது எல்லாம்.

அதிகாரியோடு நட்புறவு ஏற்பட்ட பிறகு அதே ஆண்டு வேறு குடியிருப்பு பகுதியை வாடகைக்கு எடுத்த தமன் தீப் சிங், அந்த குடியிருப்பினை 12 முதல் 13 வரையான நபர்களுக்கு உள்வாடகைக்கு விட்டிருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஏறக்குறைய 200 சிங்கப்பூர் டாலர்களை ஒவ்வொரு மாதமும் வாடகையாக பெற்றிருக்கிறார்.

குறைந்த வாடகையில் இருக்க ஒரு சிறிய இடம் கிடைத்தாலே போதும் எனும் சிந்தனையுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களின் சூழ்நிலை இவருக்கு மிகவும் சாதகமாக போனது.இன்னும் கூடுதல் வாய்ப்பாக எப்போதெல்லாம் வீட்டுவசதி வாரியத்தில் இருந்து மேற்பார்வையிட வருகிறார்களோ, அப்போதெல்லாம் தனது நண்பரான அதிகாரியிடமிருந்து முன்னரே தகவல்களைப் பெற்றுக்கொண்டு, சோதனையிட வரும்போது குடியிருப்பில் யாருமில்லாத படியும் எந்த தடயங்களும் இல்லாத படியும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.( கண்டிப்பாக அதிகாரியை அதற்காக சிறப்பாக கவனித்து இருப்பார்)

குடியிருப்பில் அதிகம் பேர் இருப்பதாகவும், அதிக சத்தம் வருவதாகவும் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் காவல்துறையிடம் புகார் செய்த போது, 2019 மே 8 , 2019 செப்டம்பர் 10 ஆகிய இரு முறைகளும் , அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பரிசோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் இருந்தும் வழக்கம்போலவே தப்பி இருக்கிறார் தமன் தீப் சிங். ஆனாலும்கூட இரண்டாவது முறை பரிசோதனைக்கு பிறகு செப்டம்பர் மாதமே அவரை அந்த சந்தேகத்தின் அடிப்படையில் அந்த குடியிருப்பை காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் அந்த குடியிருப்பின் உரிமையாளரிடம் சொல்லிச் சென்றனர். தமன் தீப் சிங்கும் அந்த செப்டம்பர் மாதமே குடியிருப்பை காலி செய்துவிட்டார்.

2019 இல் நடந்த இந்த நிகழ்வுகள் எல்லாம் கடந்த மாதம் அந்த வீட்டு வசதி வாரிய அதிகாரி கலையரசன் மீது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரிக்கும் பொழுது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன என்பதுதான் வழக்கின் திருப்பம்.அதைத் தொடர்ந்து தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார் தமன் தீப் சிங்.

இப்போது முதல் கட்டமாக 25 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர், தன் மீது விதிக்கப்பட்டிருக்கும் குற்றங்களுக்காக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 2,000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரியவருகிறது.

இப்படி சட்டத்தை மீறுபவர்கள் மீது கோபப்படுவதா ? அல்லது மிச்சப்படுத்துகிறது ஒரு டாலர் என்றாலும் கூட, சொந்த ஊரில் குடும்பம் பிள்ளைகளுக்கு உதவியாக இருக்குமே என, எல்லா வசதி குறைபாடுகளையும் தாங்கிக்கொண்டு இது போன்றவர்களுக்கு வழிவிடும் அப்பாவி புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை நினைத்து வருத்தப்படுவதா ?

Related posts