ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க, இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஒமைக்ரான் பரவலாம் என்ற ஆபத்தான நாடுகள் பட்டியலை வெளியிட்டு, அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்தன. அவர்கள் இந்தியா வந்ததும் விமான நிலையங்களிலேயே கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், தற்போது ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை இந்திய அரசு நீக்கி உள்ளது. இதன்மூலம், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் பயணிகள் கூடுதல் கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை இனி பின்பற்ற தேவையில்லை.
தற்போது இந்தியா வெளியிட்டுள்ள ஆபத்தான நாடுகள் பட்டியலில், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, கானா, மொரீஷியஸ், நியூசிலாந்து, தான்சானியா, ஜிம்பாப்வே, ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளே உள்ளன.
மேலும் தற்போது சிங்கப்பூர் தவிர, மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்குபவர்களிடம் PCR அல்லது RT-PCR சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த PCR சோதனைக்கு முன்னதாக சுமார் 700 இந்திய ரூபாயும், RT-PCR சோதனைக்கு சுமார் 3400 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக AAI தெரிவித்தது. இதில் PCR சோதனை முடிவுகள் பெற 5 மணிநேரத்திற்கு மேலே ஆகும் என்றும் RT-PCR சோதனை முடிவு 1 மணிநேரத்திற்குள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் PCR சோதனைக்கு 100 ரூபாயும், RT-PCR சோதனைக்கு 500 ரூபாயும் விலையை குறைத்துள்ளது சென்னை விமான நிலையம். ஆகையால் இனி மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் PCR சோதனைக்கு 600 ரூபாயும், மேலும் RT-PCR சோதனைக்கு 2900 ரூபாயும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Omicron பரவலால் ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. பல ஐரோப்பா யூனியன் நாடுகள் தனிப்பட்ட வகையில் இதே தடையை விதித்துள்ளது. தென்னாபிரிக்க பயணிகளுக்கு மற்ற அண்டை நாடுகளிலும் விரைவில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓமிக்ரான் பரவிய நாடுகளில் இருந்து இதற்கு முன்பே இந்தியா வந்தவர்களையும் சோதிக்க வேண்டும் என்று அண்மையில் மத்தியில் ஆளும் அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.