சிங்கப்பூர் புவி வெப்பமயமாவதை தடுக்க பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது என்று தான் கூறவேண்டும். ஏன் உலகமே அதைத் தான் தற்போது செய்து வருகின்றது என்றே கூறலாம், இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சிங்கப்பூரில் கடுமையான வெப்பம் நிலவி வருகின்றது.
சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி சுமார் 39 ஆண்டுகள் கழித்து, சரியாக சொல்லப்போனால் 1983ம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி 2022 அன்று சிங்கப்பூரில் 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு சேவை சிங்கப்பூர் (MSS) அளித்த தகவலின்படி, கடந்த மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் தொடங்கி ஏப்ரல் முழுவதும் தொடர்ந்த பருவமழை காலநிலை, வெப்பமான வானிலை, பிற்பகல் நேரங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் லேசான காற்று ஆகியவற்றைக் கொண்டு வந்தது என்று கூறியது.
MSS தரவுகளின்படி, இது சிங்கப்பூரில் பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாகும். கடந்த ஏப்ரல் 17, 1983 அன்று சிங்கப்பூரின் தெங்காவில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் பதிவானது. அதே போல இதற்கு முன்பு செப்டம்பர் 30, 2016 அன்று செலிடாரில் 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் வெப்ப அலை..
வெப்ப அலை என்பது, தினசரி அதிகபட்ச வெப்பநிலை தொடர்ச்சியாக மூன்று நாட்களில் குறைந்தபட்சம் 35°C ஆக இருந்தால் அதனை நம்மால் வெப்ப அலை என்று அழைக்கமுடியும். மேலும் அந்த காலம் முழுவதும் தினசரி சராசரி வெப்பநிலை குறைந்தது 29°C ஆக இருக்க வேண்டும்.
ஆகவே MSS அளித்த தகவலின்படி, சிங்கப்பூர் கடந்த 10 ஆண்டுகளில் ஒன்று அல்லது இரண்டு வெப்ப அலைகளை அனுபவித்து வருவதாகவும், கடைசியாக ஏப்ரல் 2016ல் வெப்ப அலை ஒன்று ஏற்பட்டதாகவும் ST வெளியிட்ட தகவலை மேற்கோளிட்டு காட்டியது.
மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இடியுடன் கூடிய மழை ஒட்டுமொத்த வெப்பநிலையை குறைக்க உதவியது என்றும் MSS மேலும் கூறியது. வெப்பம் அதிகம் உள்ள மாதமாக ஏப்ரல் இருந்தபோதிலும் அதன் பிற்பாதியில் அதிக அளவில் மழை பெய்ததால் கடந்த 10 ஆண்டுகளில் கடந்த ஏப்ரல் 2022 மூன்றாவது குளிர்ச்சியான ஏப்ரல் என்றும் MSS கூறியது.