TamilSaaga

சிங்கப்பூரில் உழைத்து பாடுபட்டு சேர்த்த 8 லட்சம்.. ஆசை ஆசையாய் தாலிக்கொடி வாங்கிக் கொடுத்த கணவரின் பரிதாப நிலை!

குடும்பத்தை கரைசேர்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் பல தொழிலாளர்கள் தங்கள் தாயகத்தை விட்டு சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் வேலைக்காக வருகின்றனர் என்பதை நாம் அறிவோம். ஆனால் அப்படி வரும் ஒரு சில தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமான நிலைக்கு மாறுகின்றது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அந்த வகையில் அண்டை நாடான இந்தியாவில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சிங்கப்பூர் வந்து பாடுபட்டு உழைத்த ஒரு தொழிலாளியின் மனைவியே அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்தவர் தான் கோபி (வயது 32), இவருக்கும் கீழ்ப்புலியூர் என்ற கிராமத்தை சேர்ந்த சின்னம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு சித்தார்த் என்ற மகனும் ரித்லிக்கா என்ற மகளும் உண்டு.

ஒரு கட்டத்தில் குடும்ப சூழல் கருதி சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்துள்ளார் கோபி, அவர் பணிபுரிந்த சிங்கப்பூர் நிறுவனத்தில் கோபியின் மைத்துனரும் (சின்னம்மாளின் சகோதரர்) வேலை செய்துள்ளார். பல ஆண்டுகள் அல்லும்பகலுமாக உழைத்து தனது மைத்துனரிடம் சுமார் 8 லட்சம் ரூபாயை கொடுத்துவைத்துள்ளார் கோபி.

சொந்த மண்ணை விட்டு பிழைக்க வரும் இடத்தில் நம்முடன் நமது சொந்தங்கள் இருப்பது யாருக்கும் அவ்வளவு எளிதில் வாய்த்திடாத பாக்கியம் என்பதால், அரும்பாடுபட்டு சேர்த்த பணத்தை தனது மைத்துனரிடம் கொடுத்து வைத்துள்ளார் கோபி.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் முதன் முறையாக.. 11 வயது சிறுமிக்கு வந்த கொடுமை – கடவுளை வேண்டிக் கொண்டு மருத்துவர்களிடம் மகளை ஒப்படைத்த பெற்றோர்!

அதுமட்டுமல்லாமல், தனது மனைவிக்காக 8 பவுனில் தாலிக்கொடியும் செய்து போட்டுள்ளார் அந்த புலம்பெயர் தொழிலாளி. அவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த நிலையில் மனைவி சின்னம்மாள் மற்றும் குழந்தைகள் அவருடைய தாய் பாப்பாத்தி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆண்டுகள் சில கடக்க, இறுதியாக தனக்கு கிடைத்த விடுமுறையில் தனது சொந்தங்களை பார்க்க ஓடோடி சென்றுள்ளார் கோபி. அப்போது தான் அவருக்கு பேரிடி தரும் வகையில் “உன்னோடு வாழ எனக்கு விருப்பமில்லை இங்கிருந்து போய்விடு” என்று கூறி அதிர்ச்சியடைய செய்துள்ளார் அவரது மனைவி சின்னம்மாள்.

சிறு அறைக்குள் முடங்கி கிடந்தது, கிடைத்த பணத்தில் அரைவயிறு உண்டு அதில் சேமித்து லட்சக்கணக்கில் பணம் அனுப்பிய அந்த தொழிலாளிக்கு இறுதியில் கிடைத்த பரிசு அதுதான். எவ்வளவோ கெஞ்சியும், கூட வாழ முடியாது என்று மனைவி கூற, இறுதியில் இவரே விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்ல அங்கு இவர்களுக்கு விவாகரத்தும் வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தில் தான் போட்ட 8 பவுன் தாலிக்கொடி மற்றும் மைத்துனரிடம் கொடுத்துவைத்த 8 லட்சம் பணம் ஆகியவற்றை திரும்ப தருவதாகவும் எழுதிக்கொடுத்துள்ளார் சின்னம்மாள். ஆனால் சொன்னபடி பணத்தையும் நகையையும் கொடுக்காமல் முன்னாள் மனைவி சின்னம்மாள் கோபிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக தற்போது அம்மாவட்ட SPயிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.

இது குறித்த வழக்கு விசாரணையும் தற்போது நடைபெற்று வருகின்றது, குடும்பத்திற்காக மட்டுமே தன் நலனையும் பொருட்படுத்தாது சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று உழைக்கும் தொழிலாளர்களின் நிலை இப்படி இறுதியில் கவலைக்கிடமாக மாறுவது உண்மையில் பெருமளவு வருத்தத்தை அளிக்கின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts