உலகமயமாக்குதல், ஏறக்குறைய எல்லாருக்கும் எல்லாம், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும், என்னும் அளவுக்கு ஒரு உலகளாவிய சந்தையை உருவாக்கி இருக்கிறது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் என்பது இதன் ஒரு பகுதிதான். இப்படி வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் நாடுகளில் வந்து பணி புரிவதை அந்த நாட்டுக்காரர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? என்கிற ரீதியில், ‘தேசியமையம்’, ‘ஆசியாவின் வேலைவாய்ப்பு மையம்’ என்றெல்லாம் சிறப்பு பெற்றுள்ள சிங்கப்பூர் குடிமக்களி்டம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. சிங்கப்பூரர்கள் பற்றிய சிந்திக்க வைக்கும் அந்த முடிவுகளை பற்றிய ஒரு பார்வை.
IPS – இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாலிசி ஸ்டடீஸ் – சிங்கப்பூரின் கொள்கை ஆய்வுகள் நிறுவனம் – அதிக அளவில் சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் பற்றியும், தங்கள் நாட்டைக் குறித்து தாங்கள் அதிகம் பெருமைப்படுவது எது என்பது பற்றியும் ஒரு ஆய்வு நடத்தியது.
கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர், நவம்பர் மாதங்களில் 2001 சிங்கப்பூர்காரர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், கடந்த வியாழனன்று, ‘சிங்கப்பூர் வாசிகளின் தேசிய பெருமையும், அடையாளமும்’ எனும் தலைப்பில் அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கிறது.
IPS Singaporeன் தலைமை ஆராய்ச்சியாளரும்,சமூக ஆய்வகத்தின் தலைவருமான திரு.மாத்யூ மாத்யூஸ் அவர்களை முன்னணி எழுத்தாளராகவும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (National University Singapore) சமூகவியல் துறையின் இணை பேராசிரியர் திரு .டான் எர்ன் சர் அவர்களை இணை எழுத்தாளராகவும் கொண்டு சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த அறிக்கையின் சில சிறப்பம்சங்கள்.
உலகமயமாக்கல் நாட்டின் தனித்துவமான தேசிய அடையாளத்தில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுதான் வெளிநாட்டு மனித வளம், மற்றும் உலகளாவிய சுதந்திரமான வியாபாரம், பற்றிய வாதங்களைத் தூண்டியுள்ளது.
ஆய்வு நடத்தப்பட்டவர்களில் 83 சதவிகிதம் பேர் பொதுவாக உலகமயமாக்கல் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
75 சதவிகிதம் பேர் புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிப்பதாகவும், மேலும் 62 சதவிகிதம் பேர் நாட்டில் குடியேறியவர்கள் தங்கள் புதிய சிந்தனைகள், மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டு சமூகத்தை மேம்படுத்துவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
என்றாலும் கூட ஆய்வுக்கு பதிலளித்தவர்களில் 50 சதவிகிதம் பேர், புலம்பெயர்ந்தோர் சிங்கப்பூர்காரர்களிடம் இருந்து வேலைகளை, வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்வதாக பதிவு செய்துள்ளனர். மேலும் 53 சதவிகிதம் பேர் புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதற்காக அரசு அதிகம் செலவிடுவதாக நம்புகின்றனர்.
புலம்பெயர்ந்தோர் தங்களுக்கு போட்டியாக, தங்கள் வேலை வாய்ப்பை பறித்து கொள்பவர்களாக பார்க்கிறார்கள் யார் என்று உற்று நோக்கினால், அவர்கள் பெரும்பாலும் சமூக பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள், குறைந்த கல்வியறிவு பெற்றவர்கள் தான் என்பதை கண்டறிய முடிகிறது .
(குறிப்பு) : சமூக பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் என்பது, மூன்று அறைகள் கொண்ட வீடுகள் அல்லது சிறிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசிப்போர். குறைந்த கல்வியறிவு பெற்றவர்கள் என்பது இடைநிலைப்பள்ளி (செகண்டரி ஸ்கூல்) அல்லது அதற்கும் குறைவாக படித்தவர்கள்)
குறைந்த கல்வி கொண்டவர்களில் 50 சதவிகிதம் பேரும், உயர் கல்வி பெற்றவர்களில் (குறைந்தபட்சம் ஒரு பட்டம் பெற்றவர்கள்) 43 சதவிகிதம் பேரும் வேலைவாய்ப்புப் போட்டியினை பதிவு செய்கின்றனர்.
உலகமயமாக்கலால் அதிகரித்துள்ள வேலைகளுக்கான வெளிநாட்டுப்போட்டிகள், மற்றவர்களைவிட சில குறிப்பிட்டவர்களை பாதிப்பதால், அவர்கள் பொருளாதார பின்னடைவு, வேலை இழப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. எனவே அத்தகைய குறிப்பிட்ட குழுக்கள், ஏன் இந்த உலகமயமாக்கல் குறித்து எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள்? என்பதை கவனமாக புரிந்துகொள்ளவேண்டும்.
பொதுவாகவே இந்த ஆய்வு முடிவுகள் சிங்கப்பூரர்கள் உலகமயமாக்கல் அல்லது புலம்பெயர்தலுக்கு எதிரானவர்கள் இல்லை என்றாலும் புலம்பெயர்தல் கொள்கைகளை மேம்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்த ஆய்வின் இன்னொரு பகுதியான, சிங்கப்பூரர்கள் தங்கள் நாட்டை குறித்து பெருமையாக உணர்வது எது? என்ற கேள்விக்கு பெறப்பட்டு இருக்கும் பதில்கள் ஆச்சரியப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கல்வி – சமூக – பொருளாதார நிலை, வயது, இனம் இவை அனைத்தையும் விட, தங்கள் நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி,பரவல்,எல்லைகள் போன்றவற்றையே பெருமையாக உணர்கிறார்கள் சிங்கப்பூர்காரர்கள்.
தங்கள் நாட்டைக் குறித்து பெருமை கொள்வதாக குறிப்பிடப்பட்ட 24 காரணிகளில் இருந்து சிங்கப்பூரின் சுகாதார அமைப்பு, ஆயுதப்படை, மதநல்லிணக்கம், சுதந்திரம், கல்வி, covid-19 தொற்றுநோய் காலத்தை கையாண்ட முறை, ஆகியவற்றைக் குறித்து மிக அதிகம் பெருமைப்படுவதாகவும்,
நீண்ட காலமாக ஒரே ஆளும்கட்சி, விளையாட்டுசாதனைகள், கலைகள்,புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிகிச்சை, பத்திரிக்கை சுதந்திரம், ஆகியவை குறித்து மிகக்குறைவாக பெருமை கொள்வதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் சிங்கப்பூர்காரர்களின் தேசிய பெருமிதமும், தேச அடையாள உணர்வும் ஆரோக்கியமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் இந்த ஆய்வினை மேற்கொண்ட பேராசிரியர்கள்.
நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்கும் இது போன்ற ஆய்வுகளும், ஆய்வுமுடிவுகளும் அடிக்கடி நடத்தப்படுவது கூட ஒரு நல்ல முறைதான் போலும்… இல்லையா?