சிங்கப்பூரில் ஒரு கிராப் (Grab) டிரைவரும் அவரது மூன்று பயணிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (செப்டம்பர் 5) தீப்பிடித்து எரிவதற்கு முன்பாக தங்கள் வாகனத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் யியோ சூ காங் வெளியேற்றத்திற்கு முன்பு, மத்திய விரைவுச் சாலையில் (CTE) செலேட்டர் விரைவுச் சாலையை (SLE) நோக்கி நடந்துள்ளது.
சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அந்த தீ சம்பவம் குறித்து சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக கூறியது. மேலும் காரில் பற்றிய தீயை தண்ணீர் ஜெட் மூலம் அணைக்கப்பட்டது என்றும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் SCDF கூறியது குறிப்பிடத்தக்கது.
சாலையில் கொழுந்துவிட்டு எறிந்த கார் (Video Credits : Singapore Road Accident Facebook Page)
இந்நிலையில் அந்த காரில் பயணம் செய்தவர்கள் CNAவிடம் அளித்த தகவலின்படி திரு. திவாரி, தனது பிளாட்மேட் திரு. அன்கூர் சர்மா மற்றும் ஒரு நண்பர் திருமதி. ரிச்சா திபரேவாலுடன் காரில் செல்ல முடிவு செய்ததாகவும். அவர்கள் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் “கிராப்” வாகனத்தில் ஏறியபோது திடீரென புகை வாசனை வந்தது என்றும் கூறினார்.
அருகில் சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை உஷார்படுத்திய நிலையில் அந்த காரின் ஓட்டுநர் பாதுகாப்பான இடத்தில் அந்த காரை நிறுத்திவிட்டு உடனடியாக வண்டியில் இருந்த நால்வரும் காரை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பிறகு சாலையில் இருந்த அந்த கார் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.