TamilSaaga

சிங்கப்பூரில் நடைபெறும் எப்1 கார்பந்தயம்…முக்கிய சாலைகள் மூடப்படும் என அறிவிப்பு !

பிரபலமான எப்1 கார் பந்தயமானது சிங்கப்பூரில் இந்த ஆண்டு செப்டம்பர் 15, 16 மற்றும் 17ஆம் தேதி நடக்க இருப்பதால், செப்டம்பர் 13ஆம் தேதி முதல் மரீனா சென்டரிலும் பாடாங்கிலும் சில சாலைகள் ஒரு வாரத்துக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான சாலைகளில் ரயில்கள் கூடுதல் நேரத்திற்கு சேவை வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வழிகளில் வரும் பேருந்து சேவைகள் வேற்றுபாதைகளுக்கு மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்தயமானது இரவு நேரங்களில் மட்டுமே நடப்பதால், பெருமளவு போக்குவரத்திற்கு இடையூறு இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பந்தயம் முடிந்தவுடன், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பேருந்து சேவை படிப்படியாக திறக்க வேண்டும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள பேஸ்புக் பேஜை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

பந்தயத்திற்காக டிக்கெட் வாங்கிய பொதுமக்கள், போட்டியை காணச் செல்லும் பொழுது பொது போக்குவரத்தை உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பந்தயம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் வாகனம் ஓட்டிகளுக்கு குறியீடுகள் அமைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்டப்பட்டுள்ள வழிகாட்டியை முன்கூட்டியே காண இணையதளத்தை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் தவிர்க்க மேல் குறிப்பிட்ட தேதிகளில் முன்கூட்டியே திட்டமிட்டு பயணங்களை தொடங்குமாறு போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts