TamilSaaga

“சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் இறக்குமதி” : இயக்குநருக்கு அபராதம்

சிங்கப்பூரில் புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததற்காக சிங்கப்பூரில் உள்ள இறக்குமதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் இருவருக்கும் நேற்று புதன்கிழமை (நவம்பர் 3) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) ஜூன் ஹாங் F&B மூலம் சட்டவிரோதமாக காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டதைக் கண்டறிந்ததை அடுத்து, மலேசியாவில் இருந்து சுமார் 440 கிலோ அறிவிக்கப்படாத புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் 185 கிலோ அறிவிக்கப்படாத பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை பறிமுதல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு SFA மற்றும் சிங்கப்பூர் குடிவரவு & சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஜுன் ஹாங் F&Bக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற டிரக் உட்லண்ட்ஸ் கமாண்டில் உள்ள ICA அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வழக்கை SFAக்கு பரிந்துரைத்தனர் என்று ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய காய்கறிகளை சட்டவிரோதமாக விற்பனைக்கு இறக்குமதி செய்ததற்காக நிறுவனத்திற்கு 6,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது, அதே நேரத்தில் அதன் இயக்குனர் டான் ஹ்வீ மெங்கிற்கு 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. உரிமம் பெற்ற இறக்குமதியாளர்களால் மட்டுமே உணவை இறக்குமதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு சரக்கும் அறிவிக்கப்பட்டு சரியான இறக்குமதி அனுமதியுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள் உணவுப் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தலாம், எடுத்துக்காட்டாக, அது கட்டுப்பாடற்றதாக இருந்தால் அல்லது அதிக அளவு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால் அவை ஆபத்தானதாக இருக்கலாம் என்று அறிக்கை மேலும் கூறியது.
புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யும் குற்றவாளிகளுக்கு $10,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related posts