TamilSaaga

Exclusive : வெளிநாட்டில் இருந்துகொண்டே சிங்கப்பூரில் தொழில் தொடங்க முடியுமா ? – முழு விவரம்

“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்ள”, என்ற மூத்தோர்களின் வாக்குப்படி மனிதன் செயல்பட்டால், நிச்சயம் வாழ்க்கையில் அனைவராலும் முன்னேற முடியும் என்பது நிதர்சனமான உண்மை. மாதம் முதல் தேதியில் வரும் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழும் மக்கள் தங்களுடைய இறுதி நாள் வரை உழைக்க வேண்டியிருக்கும். அதே சமயம் உலகில் உள்ள அனைவராலும் சொந்த தொழிலும் செய்யமுடியாது என்பதும் உண்மை.

இந்நிலையில் பிற நாடுகளில் இருந்து கொண்டே சிங்கப்பூரில் ஒருவரால் தொழில் தொடங்க முடியுமா? அதற்கு சிங்கப்பூர் அரசு எந்த வகையில் உதவி செய்யும். தொழில் தொடங்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? யாரெல்லாம் தொழில் தொடங்கலாம் என்பதை குறித்து தெளிவாக இந்த பதிவில் நாம் காணலாம். சிங்கப்பூரை பொறுத்தவரை பிற நாடுகளை சேர்ந்தவர்கள் நிச்சயம் தொழில் தொடங்க முடியும், அதற்கு ஒரு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது.

சிங்கப்பூரில் தொழில் தொடங்க “ACRA” என்று அழைக்கப்படும் கணக்கியல் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையம் மூலம் மக்கள் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்யவேண்டும். இந்த இணையத்தில் தொழில் தொடங்க உள்ளவரின் முழு தகவலும் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்காக ஆகும் செலவு என்பது வெறும் 1 சிங்கப்பூர் டாலர் மட்டுமே என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில் பதிவு செய்வதன் மூலம் ஒருவரால் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து தொழில் தொடங்க முடியும்.

மேலும் தொழில் தொடங்குபவர்களுக்கு சிங்கப்பூர் அரசும் பெரிய அளவில் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது. தொழில் தொடங்கி மூன்று ஆண்டுகள் வரை வரி ஏதும் வாங்காமல் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது சிங்கப்பூர் அரசு. மூன்று ஆண்டுகள் கழித்தே அந்த தொழில் செய்பவர்களுக்கு வரிகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் வெகு சிலர் இந்த தளர்வை முறையாக பயன்படுத்தாமல் அரசை ஏமாற்றுபட்சத்தில் அவர்களுக்கு சிங்கப்பூர் அரசு அபராதம் விதிக்கின்றது.

ஆகையால் முறையான ஆவணங்கள் கொண்டு, சிங்கப்பூரில் உள்ள சில சட்ட ஆலோசகர்களின் ஆலோசனையோடு தொழில் மேற்கொண்டால் நிச்சயம் அது பல நன்மைகளை பயக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Related posts