TamilSaaga

சிங்கப்பூரில் குடியிருப்புகளில் எல்லோரையும் பாடாய்படுத்தும் மூட்டைப்பூச்சி.. எளிய முறையில் விரைவில் ஒழிப்பது எப்படி?

சிங்கப்பூரில் உள்ள பல குடியிருப்புகளில் இந்த குட்டி சாத்தானின் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது ஊர் சுத்தமாக இருந்தாலும், எங்கிருந்தோ வந்து வீட்டில் தங்கி மனிதர்களை பாடாய்படுத்துகிறது. குறிப்பாக dormitories-களில் தங்கியிருப்பவர்களுக்கும் இது தரும் தொல்லை ஏராளம்.

கட்டிலிலோ, மெத்தையிலோ படுக்க முடியாதபடி படுத்திவிடும். இந்த வகை பூச்சிகள் மனிதனின் இரத்தத்தை உறிஞ்சு உயிர் வாழ்பவை. இவை சிமெக்ஸ் லெக்டுலாரிஸ் (Cimex lectularius) என்று அழைக்கப்படுகின்றன. இரவு நேரம் இவைகளுக்கு ஒர்க் டைம். இந்த பூச்சிகள் பறக்காது. ஆனால், வீட்டில் உள்ள உடைகள், பர்னிச்சர்கள் மூலம் இவை இடம்பெயர்ந்துவிடும்.

சரி… இந்த மூட்டைப்பூச்சிகளை இயற்கையான முறையில் விரைவாக ஒழிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

கிராம்பு

பொதுவாக கிராம்பு ஆயில் பூச்சிகளை எதிர்த்து கொல்லும் சக்தி வாய்ந்தது. இதில் உள்ள அமிலத்தன்மை மற்றும் இதன் அதீத வாசனை பூச்சிகளை விரட்டி அதன் பெருக்கத்தை தடுக்கிறது.

பயன்படுத்தும் முறை

1 டேபிள் ஸ்பூன் கிராம்பு எண்ணெய் எடுத்து கொண்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது இந்த கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து பூச்சிகள் பரவியுள்ள இடத்தில் ஸ்பிரே செய்யவும்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வேலைக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு… தற்போது சிங்கையில் பணிபுரியும் நீங்கள் சொல்ல விரும்புவது?

வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய் ஓரு அற்புதமான கிருமி நாசினியாகும். வேப்பிலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டை பூச்சிகளை கொல்ல பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறை

1 அவுன்ஸ் வேப்பெண்ணெய்யை எடுத்து, அதனுடன் 4 அவுன்ஸ் தண்ணீர் சேர்த்து அதனுடன் 1/2 டீ ஸ்பூன் அளவு சோப்பு எடுத்து கலந்து கொள்ளவும். பிறகு அதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து பூச்சிகள் உள்ள இடங்களான கட்டில், மெத்தை, இடுக்குகள் போன்ற இடங்களில் ஸ்பிரே செய்யுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் 3 வாரங்கள் செய்து வந்தால், மூட்டை பூச்சிகள் முழுமையாக ஒழிந்துவிடும்.

லாவண்டர் எண்ணெய்

இதுவும் பூச்சிகளை விரட்ட பயன்படும் சிறந்த எண்ணெய்யாகும்.

பயன்படுத்தும் முறை

50 மில்லி லிட்டர் தண்ணீரில் 10-15 சொட்டுகள் லாவண்டர் எண்ணெய்யை கலந்து, நன்றாக குலுக்கி அதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் எடுத்துக் கொண்டு, பூச்சி உள்ள பகுதிகளில் அடித்து வந்தால், தொல்லை குறையும்.

யூகப்லிட்டஸ் ஆயில்

பூச்சிகளை விரட்டுவதில் யூகப்லிட்டஸ் தி பெஸ்ட் எனலாம். இதிலுள்ள பூச்சி விரட்டும் பொருட்கள் மற்றும் முட்டைகளை அழிக்கும் தன்மை பூஞ்சை, பூச்சிகள், பாக்டீரியா போன்றவற்றை அடித்து நொறுக்கிறது.

பயன்படுத்தும் முறை

1.5 அவுன்ஸ் வோட்காவுடன் 2 அவுன்ஸ் தண்ணீர் மற்றும் 30-35 சொட்டுகள் யூகாப்லிட்டஸ் ஆயில் சேர்த்து ஸ்பிரே பாட்டிலில் அடைத்து நன்றாக குலுக்கி கொள்ளவும். இதை பூச்சிகள் உள்ள இடங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஸ்பிரே செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts