TamilSaaga

சிங்கப்பூரில் தலையை கூட தூக்க முடியாத அரிய நோயில் தவிக்கும் 5 மாத குழந்தை… சிகிச்சைக்கு 1.5 மில்லியன் டாலரை கொடுத்த “Great Man”… ஆனா, ஒரே சொல்லால் பெற்றோரை வாயடைக்க வைத்த சம்பவம்!

சிங்கப்பூரில் எஸ்.எம்.ஏ எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு 1.5 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் என்கிற மிகப்பெரிய தொகையை அளித்து உதவியிருக்கிறார் ஒருவர். இதில், இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், தனது பெயரை வெளியிட அவர் விரும்பாமல் உதவி செய்ய முன்வந்ததுதான்.

எஸ்.எம்.ஏ நோய்

சிங்கப்பூரைச் சேர்ந்த ஜயான் பின் நபீல் அப்தாத் என்கிற குழந்தைக்கு அரியவகை மரபுரீதியான நோயான Spinal Muscular Atrophy (SMA) என்கிற எஸ்.எம்.ஏ நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தசை வளர்ச்சி பாதிக்கப்பட்டு, அவர்களால் நடக்கவே முடியாது. ஏன் நிமிர்ந்து உட்காருவதே கடினம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த வகை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு அதிக அளவில் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு பெரிய தொகையை எப்படி சேர்க்கப்போகிறோம் என்று குழந்தை ஜயானின் பெற்றோர் தவித்த நிலையில், கிரவுட் பண்டிங் மூலம் நிதியைத் திரட்ட நண்பர்கள் முன்வந்தனர்.

குழந்தை ஜயானுக்கு `Ray of Hope’ என்கிற கிரவுட் பண்டிங் செயலி மூலம் நிதி திரட்டப்பட்டது. சிகிச்சைக்கு 3 மில்லியன் சிங் டாலர்கள் தேவைப்பட்டது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பங்களிப்பால் சுமார் 1.5 மில்லியன் சிங் டாலர்கள் நிதி திரட்டப்பட்டது. ஆனால், அதன்பின் நிதி திரட்டும் முயற்சி கொஞ்சம் மெதுவாகவே நடந்தது. இதனால், ஜயானின் பெற்றோர்கள் தவித்து வந்த நிலையில், தனது பெயரை வெளியிட விரும்பாத நபர் ஒருவர் குழந்தையின் சிகிச்சைக்கு 1.5 மில்லியன் சிங் டாலர்களை நன்கொடையாக அளித்து சிகிச்சையைத் தொடரும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.

இதுபற்றி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான அம்ரின் அமீன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். `இந்த நல்முயற்சி என்னை நெகிழவைத்துவிட்டது. இதுபோன்ற கடினமான சூழல்களிலும் நம்மால் உதவ முடியும் என்கிற ஒரு சூழல் நமது சமுதாயத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று அம்ரீன் பகிர்ந்திருந்தார்.

போதுமான பணம் கிடைத்த நிலையில், கடந்தமாத இறுதியில் நிதி திரட்டும் முயற்சி முடித்துக் கொள்ளப்பட்டு, குழந்தை ஜயானுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டிருக்கிறது. ஐந்து மாதக் குழந்தையான ஜயானுக்கு மிகவும் அரிதான ஜீன் தெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் பாதிப்பைக் குறைக்கலாம். அதன்படி ஜயானுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts