2020 ஏப்ரல் பெருந்தொற்றின் பரவலும் தாக்கமும் அதிகரித்து வந்தபோது, சிங்கப்பூர் வாழ் புலம்பெயர் தொழிலாளர்களின் தங்குமிடங்களில் இரட்டிப்பு வேகத்தில் அதிகரித்து வந்த தொற்றினை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம், The Inter – Agency Task Force ( ITF ) என்கிற பிரிவை உருவாக்கி, முழுநேரமும் அவர்களை புலம்பெயர் தொழிலாளர்களின் உதவிக்காக நியமித்தது.
அவர்களின் தொடர் முயற்சிகளால், 2020 ஆகஸ்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் தங்குமிடங்களில் தோற்று முற்றிலுமாக நீக்கப்பட்டதாக என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த குழுவின் பணிகளை புதிய கோணத்தில் தொடர்வதற்காக ACE எனும் புது, தனி பிரிவு உருவாக்கப்பட்டு,ITF ன் பணிகள்,பொறுப்புகள் ACE க்கு மாற்றப்பட்டது.
ACE- The Assurance, Care And Engagement – Unit
2020 செப்டம்பர் முதல் மனிதவள அமைச்சகத்தின் இந்தப் பிரிவானது, புலம்பெயர் தொழிலாளர்களின் தேவைகள் அனைத்திற்கும்,தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தது.
இப்போது தொற்று ஏறக்குறைய குறைந்து வரும் சூழலில், அந்தப் பிரிவின் அடுத்தகட்ட செயல்பாடுகள், வேலைகள்,தேவை என்ற கேள்வி எழுப்பப்படும்போது,அந்த பிரிவினை நிரந்தரமாக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது மனிதவள அமைச்சகம். இந்த ACE ன் கடந்த கால செயல்பாடுகள், அதன் நோக்கம், இதுவரை அந்தப் பிரிவு புலம் பெயர் தொழிலாளர்களுக்காக செய்திருப்பதை, அனைத்தையும் குறித்து அந்த தனிப்பிரிவின் தலைமை அதிகாரி,திரு. டங் யூய் ஃபாய் அவர்களின் கருத்துக்கள் இங்கே …
ACE குரூப் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே, வேலை கொடுக்கும் நிறுவனங்கள், தங்குமிடங்களை நிர்வகிப்பவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மேலும் மற்ற பங்குதாரர்கள் ஆகியோருடன் ஒரு சுமூகமான சூழலை உருவாக்கி அதன் வழியாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது தான்.
எனவே அனைத்து சூழல்களிலும் மிகவும் தேவைப்படும் இந்த குழுவின் பணிகளை தொடர்ந்து செய்ய மனிதவள அமைச்சகம் விரும்புவதாகவும், அதற்கு இந்த குழுவுக்கு தேவையான ஊதியம் உள்ளிட்ட உதவிகளை செய்வதற்கு நிதி அமைச்சகம் ஏற்கனவே நிதி ஒதுக்கி உள்ளதாகவும், இது குறித்த தெளிவான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்தப் பிரிவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தொடர்ந்து இந்த பிரிவின் அதிகாரிகள் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஒரு நல்ல உறவைப் பேணுவதிலும் அவர்களது நம்பிக்கையை பெறுவதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் நிலைமை முழுதும் சீராகும் பொழுது, இதன் தேவை குறைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.ஏற்கனவே பல அதிகாரிகள் தங்களது பழைய பணிக்கு திரும்பி இருக்கிறார்கள். அவ்வப்போது வந்து பார்வை இடும் பணியை மட்டும் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு தொற்று உச்சத்தில் இருந்தபோது அரசாங்கமே நேரடியாக இந்த தங்குமிடங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது போல இனிமேல் தொடர்ந்து செய்ய தேவை இருக்காது. அதே சமயம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, அவர்களின் தேவைகளை நிறைவேற்ற ACE குரூப் மட்டும் தனித்து செயல்படவும் முடியாது என்கிற எதார்த்த நிலைகளையும் பதிவு செய்கிறார் அதன் தலைவர்.
திடீரென அதிக அளவில் தொற்று பெருகிய போது என்ன செய்வது என்று ஒரு தெரியாத சூழலில், எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் செயல்பட வேண்டிய ஒரு இக்கட்டான சூழலைத் தொடர்ந்து , கடந்த ஆகஸ்ட் மாதம் தங்குமிடங்கள் தொற்று இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த தங்கும் இடங்களை இன்னும் சிறப்பானவைகளாக மாற்றித்தரும் எண்ணத்தோடுதான் நாங்கள் இந்த பொறுப்பினை ஏற்றுக் கொண்டோம்.
அதுமட்டுமல்லாமல் புதிதாக வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தங்கும் இடங்களை தயாரித்துக் கொடுப்பது, ஏற்கனவே இருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் தடுப்பூசி இயக்கத்தை ஏற்பாடு செய்வது போன்ற கூடுதல் பொறுப்புகளையும் எங்களது ACE பிரிவே ஏற்றுக் கொண்டது.
சிறப்பாக ACE பிரிவானது, ‘சுகாதாரம், தங்கும் இடங்களை ஏற்படுத்திக் கொடுப்பது, சமூக மீள்திறன் , ஆகிய மூன்று முக்கிய முன்னெடுப்புகளை அடிப்படையாகக் கொண்டு இதுவரை செயலாற்றி வந்திருக்கிறது. இனியும் தொடர்ந்து செயலாற்றும்,என தனது நம்பிக்கையையும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்வதற்கான தங்களது தயார் நிலையையும் விளக்கியுள்ளார் திரு. டங்க் அவர்கள்.