TamilSaaga
types of work pass in singapore

உங்கள் வேலை, வருமானத்தை பெருக்க சிங்கப்பூர் அரசு என்னென்ன “WorkPass” வசதிகளை தருகிறது? இந்த யுக்தியை பயன்படுத்துங்கள்

சிங்கப்பூரில் பணிபுரிய விரும்பும் அனைத்து வெளிநாட்டினரும் வேலையைத் தொடங்குவதற்கு முன் செல்லுபடியாகும் பாஸ் (valid pass) பெற்றிருக்க வேண்டும். சிங்கப்பூரில் இது பொதுவாக வேலை விசா (work visa) என்று அழைக்கப்படுகிறது.

நீங்கள் சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பினால், உங்களிடம் செல்லுபடியாகும் பாஸ் வைத்திருப்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.

நீங்கள் செய்யும் வேலை வகை மற்றும் உங்கள் திறன் நிலை ஆகியவற்றைப் பொறுத்து, நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய பல்வேறு வகையான சிங்கப்பூர் விசாக்கள் உள்ளன.

சிங்கப்பூர் வேலை விசாக்களின் வகைகள்

சிங்கப்பூர் வேலை விசாக்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:

1.தொழில் வல்லுநர்களுக்கான சிங்கப்பூர் வேலை விசாக்கள். (For Professionals)

Employment pass

இது வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூரில் பணியாற்ற வரும் உயர் அதிகாரிகள், IT துறை நிர்வாகிகள் மற்றும் தனியார் நிறுவன மேனேஜர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் மாதம் குறைந்தபட்சம் $5,000 ஊதியம் பெறுபவராக இருக்க வேண்டும். இந்த பாஸின் காலம் இரண்டு ஆண்டுகள், அதன் பிறகு மூன்று ஆண்டுகள் வரை புதுப்பிக்கலாம். பணியாளரின் சார்பாக வேலை வழங்குபவர் அல்லது நிறுவனர் விண்ணப்பிக்க வேண்டும்.

Personalised Employment Pass

அதிக ஊதியம் பெறுபவர்கள் மற்றும் ஏற்கனவே employment pass வைத்திருப்பவர்கள் மற்றும் உயர் தொழிற்தகுதி, தனித்திறமைகள் கொண்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் $22,500 நிலையான மாதச் சம்பளத்தைப் பெறுபவராக இருத்தல் வேண்டும். இது ஒரு முறை 3 வருட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும். மீண்டும் புதுப்பிக்க இயலாது.

Entre pass

இது சிங்கப்பூரில் புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்ட வணிகம் செய்ய விரும்பும் தகுதியுடைய வெளிநாட்டு தொழில்முனைவோர்களுக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், பார், நைட் கிளப் மற்றும் காபி ஷாப் போன்ற ஒரு சில வணிகத்திற்கு இந்த pass பெற இயலாது. தகுதியுடைய சம்பந்தப்பட்ட தனிநபரே நேரடியாக விண்ணப்பிக்க இயலும்.

2, திறமையான மற்றும் பகுதி திறமையான தொழிலாளர்களுக்கான சிங்கப்பூர் வேலை விசாக்கள் (for Skilled and Semi Skilled Workers)

S Pass

வர்த்தகத் திறனில் நிபுணத்துவம் பெற்ற நபர்களுக்கானது, மேலும் இது பொதுவாக தொழில்நுட்ப ஊழியர்களுக்குப் பொருந்தும். குறைந்தபட்ச சம்பளத் தேவை $3,150 ஆகும், இது வயதுக்கு ஏற்ப படிப்படியாக அதிகரித்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு $4,650 ஆக உயரும். இந்த பாஸ் இரண்டு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும், அதன் பிறகு நீங்கள் சம்பள அளவுகோலைப் பூர்த்தி செய்தால் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம். இதனை வேலைவழங்குபவர் அல்லது வேலை வழங்கும் நிறுவனம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த pass வைத்திருப்பவர் வேலை மாறினால், புதிய நிறுவனம் இந்த pass பெற மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் .கூடுதலாக, இந்த பாஸ் வைத்திருப்பவருக்கு மருத்துவக் காப்பீட்டை வேலை வழங்கும் நிறுவனம் வழங்குவதும் அவசியம்.

Work Permit for Migrant Workers

சிங்கப்பூரில் கட்டுமானம், உற்பத்தி, கடல்சார் கப்பல் கட்டும் தளம், செயல்முறை அல்லது சேவைத் துறைகளில் பணிபுரிய வரும் சாதாரண வெளிநாட்டு தொழிலாளர்களுக்கானது. குறைந்தபட்ச சம்பள தேவை இல்லை. பணியாளர்கள் சார்பாக வேலை வழங்குபவர் அல்லது வேலை வழங்கும் நிறுவனம் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கால அளவு உடையது. இந்த pass வைத்திருப்பவரின் காப்பீடு மற்றும் மருத்துவப் பத்திரங்களை, வேலை வழங்குபவர் அல்லது நிறுவனம் நீட்டித்தால் மீண்டும் புதுப்பிக்க இயலும். பணியாளர்கள் வேலை வழங்கும் நிறுவனம் தவிர்த்து வேறு எங்கும் பணிபுரிய இயலாது.

Work Permit for Migrant Domestic Worker

சிங்கப்பூருக்கு, வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்ய வருபவர்களுக்கானது. அவர்கள் 23 – 50 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வியாக எட்டாம் வகுப்பு முடித்த சான்றிதழ் வேண்டும். குறைந்தபட்ச சம்பளத் தேவை எதுவும் இல்லை. பணி வழங்குபவர் , ஸ்பான்சர் அல்லது வேலை வழங்கும் நிறுவனம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் வேலை வழங்குபர் அல்லது நிறுவனம் தாங்கள் பணியமர்த்தும் ஒவ்வொரு பணியாளருக்கும் $5,000க்கு security bond அளிக்க வேண்டும். மேலும் அவர்கள் பணியாளரின் மருத்துவ மற்றும் காப்பீட்டுத் தொகையை நீட்டித்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்.

Work Permit for confinement nanny

மலேசியாவைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கானது. பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளருக்குக் குழந்தை பிறந்திருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவியாக இந்த விசாவின் மூலம் இவர்கள் 16 வாரங்கள் வரை அவர்களின் வீட்டில் தங்கி பணி புரிய முடியும். மேலும் இவர்கள் 23-70 வயதிற்குள் இருக்க வேண்டும். வேலை வழங்குபவரின் குழந்தை பிறந்து நான்கு மாதத்திற்குள்ளாக இருத்தல் அவசியம்.

Work Permit for performing artiste

ஹோட்டல்கள், மதுபானக் கூடங்கள், இரவு விடுதிகளில் நடனக் கலைஞர்களாக, பாடகர்களாகப் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படுவது.

3, பயிற்சி பெறுபவர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிங்கப்பூர் வேலை விசாக்கள்( for Trainees and Students)

Training Employment pass

சிங்கப்பூரில் தொழில்முறை, நிர்வாக, அல்லது சிறப்புப் பணிகளுக்கான நடைமுறைப்பயிற்சியை 
வெளிநாட்டினர் பெற இந்த பயிற்சி வேலைவாய்ப்பு அனுமதிச் சீட்டு அனுமதிக்கிறது.

Work Holiday Pass under Work Holiday Programme

தகுதியான மாணவர்களையும், இளம் பட்டதாரிகளையும் விடுமுறையின் போது 6 மாதங்களுக்கு சிங்கப்பூரில் தங்கி வேலை செய்ய அனுமதிக்கிறது. ஆஸ்திரேலிய மாணவர்கள் விடுமுறையின் போது சிங்கப்பூரில் தங்கிப் பணியாற்ற 1 வருடம் அனுமதி வழங்கப்படுகிறது.

4, குடும்ப உறுப்பினர்களுக்கானது ( Family members)

Dependent’s Pass

இது மாதம் $6000 மேலாக ஊதியம் பெறும் Employment Pass அல்லது S Pass வைத்திருப்போரின் சட்டப்பூர்வ மனைவி மற்றும் 21 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சிங்கப்பூர் வருவதற்காக தரப்படுகிறது. இரண்டு வருடம் கால வரம்பு உடையது. இவர்கள் சிங்கப்பூரின் மனிதவளத் துறை அமைச்சகமிடமிருந்து letter of consent பெற்ற பிறகு சிங்கப்பூரில் வேலை அல்லது வணிகம் செய்ய இயலும்.

Long-Term Visit Pass

Employment Pass அல்லது S Pass வைத்திருப்போரின் மனைவி, குழந்தைகளுக்கானது. மாதம் $12,000 ஊதியம் பெறுபவர்கள் தங்கள் பெற்றோரையும் அழைக்க இயலும். இரண்டு வருடம் கால வரம்பு உடையது.

Letter of Consent for ICA-issued LTVP/LTVP+ holders

LTVP அல்லது LTVP+ pass வைத்திருப்பவரின் மனைவி அல்லது திருமணமாகாத குழந்தைகள் சிங்கப்பூரில் பணிபுரிய ஒப்புதல் கடிதத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் சிங்கப்பூரில் பணிபுரிய வருவதாக இருந்தால், மேற்கூறிய pass வகைகளில், தங்களுக்கு சிங்கப்பூர் வேலை வழங்கும் நிறுவனம் அல்லது வேலை வழங்கும் முகவர் மூலமாக எந்த வகையான pass வழங்கப்பட்டுள்ளது என்று உறுதி படுத்திய பின் மேற்கொண்டு பணி தொடர்பான நடவடிக்கைகளை தொடரவும். இது தங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள தமிழ் சாகா ஃபேஸ்புக் பக்கத்தை நீங்க ஃபாலோ பண்ணலாம்.

Related posts