பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அவரை விட 24 வயது மூத்தவரும் தனது ஆசிரியருமான பிரிட்ஜெட்டைக் காதலித்து கரம் பிடித்திருக்கிறார். வழக்கத்துக்கு மாறான இவர்களின் காதல், இம்மானுவேலின் எந்த வயதில் துளிர்த்தது தெரியுமா? இவர்களின் திருமணம் எப்படி நடந்தது? வாங்க பார்க்கலாம்.
இம்மானுவேல் மேக்ரான்
தற்போதைய பிரான்ஸ் அதிபராக இருப்பவர் இம்மானுவேல் மேக்ரான். உலகின் அதிகாரமிக்க நபர்களுள் ஒருவரான இம்மானுவேல், தன்னை விட 24 வயது மூத்தவரான பிரிட்ஜெட்டைத் திருமணம் செய்திருப்பது குறித்து பல்வேறு கேள்விகள், விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், தன்னுடைய தூய காதலால் அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி விட்டு, உலக நாடுகளின் அதிபர் குடும்பங்களை எப்படி அந்த மக்கள் விரும்புகிறார்களோ, அதேபோல் தன்னுடைய காதலையும் ஏற்றுக் கொள்ள செய்திருக்கிறார். அது சரி, இருவரும் எப்படி, எங்கே சந்தித்தார்கள்… அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது எப்படி…
மேக்ரானின் காதல்
இளம் வயதில் மேக்ரான் கவிதை எழுவதிலும் படிப்பிலும் படு சூரராக இருந்திருக்கிறார். 1993-ம் ஆண்டு பிரான்ஸின் ‘La Providence High School’ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது பிரிட்ஜெட்டை முதன்முதலாக சந்தித்திருக்கிறார். 40 வயதான பிரிட்ஜெட்டை முதல்முதலில் தனது 16 வயதில் சந்தித்த மேக்ரான், அப்போதே காதலில் விழுந்திருக்கிறார். இத்தனைக்கும் பிரிட்ஜெட்டின் மகளான லாரன்ஸ், மேக்ரானின் வகுப்புத் தோழியாவார். பிரிட்ஜெட் இம்மானுவேல் மேக்ரானின் டிராமா டீச்சராக இருந்திருக்கிறார். இவர்கள் எப்படி சந்தித்தார்கள், இம்மானுவேல் மேக்ரானின் இளம் வயது எப்படியிருந்தது என்பது பற்றியெல்லாம் பிரெஞ்சு பத்திரிகையாளரான ‘Sylvie Bommel’, ‘Il Venait D’Avoir Dix-Sept Ans (‘He Had Just Turned 17’)’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் இவர்களது சந்திப்பு, காதல் பற்றியெல்லாம் விரிவாக விளக்கியிருக்கிறார்.
பிரிட்ஜெட்டை சந்தித்த பிறகு இளம் வயது மேக்ரான், தனது ஃபேவரைட்டான நாவல் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். காதலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட அந்தக் கட்டுரை பிரான்ஸில் தேசிய அளவில் முதல் பரிசை வென்றிருக்கிறது. அதேபோல், பிரிட்ஜெட்டிடம் அவரது மகள் லாரன்ஸ், தனது வகுப்பறைத் தோழனான மேக்ரான் பற்றி, ‘எங்கள் வகுப்பில் ஒரு மாணவன் இருக்கிறான் அம்மா. அவனுக்கு எல்லாவற்றையும் பற்றி எல்லாவும் தெரிந்திருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார். இதுதான், மேக்ரான் பற்றி பிரிட்ஜெட் கேள்விப்பட்ட முதல் தருணம்.
பிரிட்ஜெட்டின் டிராமா கிளப்பில் மேக்ரான் இணைந்தபோது, அவர் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகளுக்குத் தாயாக இருந்தார். அவரின் கணவர் ’ Andre-Louis Auziere’ பிரபலமான வங்கியில் கைநிறைய சம்பாதிக்கும் அதிகாரி. பிரிட்ஜெட்டின் மூத்த மகன் செபாஸ்டியன், இம்மானுவேல் மேக்ரானை விட வயதில் மூத்தவர். செபாஸ்டியன் மட்டுமல்ல, அவரின் இளைய சகோதரியான ’Tiphaine’ உள்ளிட்டோருடன் நல்ல ரிலேஷன்ஷிப்பை மேக்ரான் தொடர்ந்தார். நாற்பதுகளில் இருக்கும் ஒரு பெண்மணி, இளைஞர் ஒருவருடன் காதலில் விழுவது சமூகத்தின் பார்வையில் சரியாகத் தெரியாமல் போகலாம்.
ஆனால், தனது காதலில் உறுதியாக இருந்த மேக்ரான், பிரிட்ஜெட்தான் தன்னுடைய வாழ்க்கைத் துணை என்பதை இளம் வயதிலேயே முடிவு செய்துவிட்டார். படித்து முடித்து வங்கி ஒன்றில் ஆரம்ப காலங்களில் பணியாற்றியபோது எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பிரிட்ஜெட் குடும்பத்தினருடன் நேரத்தைக் கழித்தார். பிரிட்ஜெட் மட்டுமல்லாது அவரது குழந்தைகளின் நன்மதிப்பையும் வென்றெடுத்தார். பிரான்ஸ் அரசில் அமைச்சராக உயர்ந்தபோதும், தன்னுடைய இளம் வயது காதலை அவர் புறந்தள்ளவில்லை. பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் தனக்கு இப்படியான காதலால் விமர்சனக் கணைகள் வரும் என்பது தெரிந்தும் அவர் பின்வாங்கவில்லை. தனது காதலை வெளிப்படையாக அறிவித்தார்.
பிரிட்ஜெட் தன்னுடைய கணவரை 2005-ல் விவாகரத்து செய்தார். அதன்பின்னர், இம்மானுவேல் மேக்ரானை 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 33 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த சர்ச்சில் தனது திருமணம் நடந்ததோ, அதே தேவாலயத்தில் இம்மானுவேல் மேக்ரானுடனான திருமணமும் நடந்தது. திருமண பந்தத்தில் இணைந்த பிறகு பிரிட்ஜெட்டின் குடும்பத்தினரையும், அவரது குழந்தைகளையும் மரியாதையுடனே நடத்தி வருகிறார். முதல்முதலாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, தனது கணவருடன், அவருக்கு ஆதரவாக எல்லாமுமாம பிரிட்ஜெட் நின்றார். அந்த பிரசாரத்தில் அவர் முன்வைத்த கருத்துகள் முக்கியமானவை.
தனது கட்சியை ஒரு அரசியல் கட்சியாக முன்நிறுத்தாமல், மக்கள் இயக்கமாக முன்னிறுத்தியதுதான் அவரது வெற்றிக்கு முக்கியமான காரணம். ஒவ்வொரு பொதுக்கூட்டத்துக்கு முன்பும் மனைவி பிரிட்ஜெட் முன் தனது உரையைப் பேசிக்காட்டுவது மேக்ரானின் வழக்கம். நாடக ஆசிரியரான பிரிட்ஜெட், பொதுக்கூட்டங்களில் பேசும்போது எப்படிப் பேச வேண்டும், பேச்சில் ஏற்ற, இறக்கங்களை எப்படிக் கொண்டு வர வேண்டும் என்பது பற்றியெல்லாம் கணவருக்குப் பாடம் எடுத்தார். வெற்றிகரமான திருமண பந்தத்தில் இருக்கும் இந்த ஜோடி, காதலுக்கு வயது ஒரு பொருட்டே இல்லை என்பதற்கான வாழும் சான்று.
நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி பிரிட்ஜெட் பற்றி பேசிய இம்மானுவேல் மேக்ரான், ‘அவர் இல்லையென்றால், நான் ஒன்றுமே இல்லை. இப்போது நான் அடைந்திருக்கும் உயரம் அவரால்தான் சாத்தியமானது. அவர் மட்டும் இல்லையென்றால், இப்போது நான் எங்கே இருந்திருப்பேன் என்று எனக்கே தெரியாது’ என்று நெகிழ்ந்திருந்தார்…
உண்மைதான்… உண்மையான காதல் உங்களை எந்த உயரத்துக்கும் அழைத்துச் செல்லும்தானே?…