“வாடை காற்றுக்கு வயசாச்சு… வாழும் பூமிக்கு வயசாச்சு… ஆனால் காதல் என்றும் புதுமையானது” என்ற கவிதையை சினிமா பாடல்களில் கேட்டிருப்போம். ஆனால் அந்தக் காதல் உண்மை என்று நிரூபித்து இருக்கின்றனர் திருமங்கலத்தைச் சேர்ந்த நிவேதிதா மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எட்வர்ட் விம். ஆம் ! தான் காதலித்த தமிழ் பெண்ணை மணப்பதற்காக ஸ்வீடனில் இருந்து உறவினர்களுடன் மதுரை திருமங்கலத்திற்கு வந்து தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து இருக்கின்றார் எட்வார்டு.
மதுரையில் கோலாகலமாக நடந்து முடிந்த இந்த திருமணம் தான் நேற்று மதுரையில் பேசு பொருளாக இருந்தது. அந்த அளவிற்கு திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் கலந்து கொண்டு வெளிநாடு உறவினர்கள் அசத்தியுள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் தமிழ் கலாச்சார முறைப்படி பட்டு வேஷ்டி மட்டும் சேலை அணிந்து வந்திருந்தது காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வினையும் காதலி நிவேதிதா ஸ்வீடன் மாப்பிள்ளைக்கு விவரித்தார். மேலும் மாப்பிள்ளையின் தாய் தந்தை, மணமகளின் தாய் தந்தைக்கு சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து முறைப்படி பெண்ணை வரவேற்றனர்.
வேத சாஸ்திரங்கள் முழங்க, அர்ச்சகர் திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வினையும் படிப்படியாக நடத்துவதை வெளிநாடு மக்கள் கண்டு ரசித்த வண்ணம் இருந்தனர். செய்தியாளர்கள் திருமண மண்டபத்தை சுத்தி வளைத்து ஒவ்வொரு நிகழ்வினையும் படம் பிடித்தனர். இதுவரை தமிழ்நாட்டில் மாப்பிள்ளை வெளிநாட்டு மணப்பெண்ணை மணந்த சம்பவத்தினை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வெளிநாட்டு மாப்பிள்ளை தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ்நாட்டில் கலாச்சாரப்படி திருமணம் செய்வது இதுவே முதல் முறை.