இந்திய விமானங்களை உற்று கவனித்தால் அதில் `VT’ எனத் தொடங்கும் கோட் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அதற்கு என்ன பொருள் என்று தெரியுமா… சிங்கப்பூர் விமானங்களுக்கும் இதேபோல் ஒரு கோட் கொடுக்கப்பட்டிருக்கும். இதைப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இந்திய விமானங்கள்
இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் எல்லா விமானங்களிலும் VT என்று தொடங்கும் கோட் இருக்கும். இது நமது கார், டூவீலர்களுக்கு ரெஜிஸ்டிரேஷன் நம்பர் வாங்குவோமில்லையா அதுபோன்று சர்வதேச அளவில் விமானங்களுக்கு வழங்கப்படும் பதிவெண் ஆகும். இப்படி ஒவ்வொரு நாடுகளுக்கு இரண்டு எழுத்துகள் கொண்ட பதிவெண்ணை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு ஒதுக்கும். எந்த நாட்டைச் சேர்ந்த விமானம் என்பதை இதைவைத்து அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதையடுத்து, 3 அல்லது 4 எழுத்துகள் விமான நிறுவனங்களின் கோரிக்கையைப் பொறுத்து வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, VT-123' என்றால் இந்தியாவைச் சேர்ந்த விமானம் என்று பொருள். இந்த இரண்டு எழுத்துகள்
Call Sign’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு VT ஒதுக்கப்பட்டது எப்போது?
இந்தியா, பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் இருந்தபோதே VT என்ற பதிவு அடையாளம் ஒதுக்கப்பட்டு விட்டது. இதற்கு Victorian State’ என்று பொருள் கொள்ளலாம் என்ற ஒரு தகவலும் இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகும் அந்த அடையாளம் நிலைத்துவிட்டது. இது காலனியாதிக்கத்தைக் குறிக்கும் சொல் என்பதால், இதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருக்கிறது. இந்தியாவைக் குறிக்கும்
IN’ அல்லது பாரதம் என்பதன் அடையாளமாக BH' அல்லது ஹிந்துஸ்தான் என்ற பெயருக்கு ஏற்ப
HI’ என்ற எழுத்துகளை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பிடம் இந்திய அரசு கேட்டுப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் இந்தியாவில் வைக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, முன்னாள் பைலட்டுகளான Vijaypat Singhania, Vijay Sethi ஆகியோர் இந்த கோரிக்கையோடு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் பாம்பே உயர் நீதிமன்றத்திலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குத் தொடர்ந்திருந்தனர். ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதில் அரசு செய்ய வேண்டிய கடமையை எந்த இடத்திலும் தவறவிடவில்லை என்று கூறி மனுவை நிராகரித்திருந்தது. அதேபோல், இந்தியப் பாராளுமன்றத்திலும் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அந்தக் கேள்விக்குப் பதிலளித்த இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் விஜய்குமார் சிங், வாஷிங்டனில் 1927 நவம்பர் 25-ல் நடந்த International Radiotelegraph Convention-ல் இந்தியாவுக்கு
VT’ என்ற பதிவெண் ஒதுக்கப்பட்டது. அதற்கு “Viceroy Territory” என்ற பொருள் இல்லை. இந்தியா தொடர்புடைய IN, BH உள்ளிட்டவைகள் மற்ற நாடுகளுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டன’ என்று தெரிவித்திருந்தார்.
கோடை மாத்த முடியாதா?
சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு பதிவெண் என்பது ஒருமுறை பெறப்பட்டு விட்டால், மாற்றுவது ரொம்பவே கடினமான விவகாரம் என்பதுதான் உண்மை. ஒருவேளை VT-யை மாற்றிவிட்டு வேறு Call Sign வாங்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு மீண்டும் முதலில் இருந்தே பதிவு வேலைகளைத் தொடங்க வேண்டும். புதிய Call Sign கிடைக்கும் வரை இந்திய விமானங்கள் வான்வெளியில் பறக்க முடியாது. அதேபோல், விமானங்களை எல்லாம் புதிதாக பெயிண்டிங் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் பெரிய அளவில் செலவு ஏற்படும் என்பதோடு, விமானங்கள் ஓடாமல் நிற்கும் காலத்தில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு, அதனால் பொருளாதாரமே பாதிக்கப்படும் அளவுக்கான விளைவுகள் ஏற்படலாம். இந்த காரணத்தாலேயே சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசும் இந்த விவகாரத்தில் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்றே சொல்லலாம். அதேநேரம், சுதந்திரத்துக்குப் பிறகு பாகிஸ்தான், நேபாளம், ஃபிஜி போன்ற நாடுகள் தங்களின் Call Sign-ஐ மாற்றியிருக்கின்றன. இந்தியாவுக்கு ATA-AWZ, VTA-VWZ மற்றும் 8TA-8YZ வரிசையிலான Call Sign-களை சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியம் (ITU) ஒதுக்கியிருக்கிறது.
சிங்கப்பூர் விமானங்களின் பதிவெண்
சிங்கப்பூர் விமானங்களுக்கான பதிவெண் 9V ஆகும். இந்த வரிசையில் 9V-AAA முதல் 9V-ZZZ வரையிலான பதிவெண்களை சிங்கப்பூரில் பதிவு செய்யப்படும் விமானங்கள் பயன்படுத்தலாம். இதுவே ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் VR-S என்ற பதிவெண் சிங்கப்பூருக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.