சிங்கப்பூரில் நேற்று ஜனவரி 29 அன்று காலை பிளாக் 39 டெலோக் பிளாங்கா ரைஸில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 73 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். SCDF வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டதாகவும், விஷயமறிந்த சம்பவ இடத்திற்கு SCDF சென்றபோது, அந்த குடியிருப்பு பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த குடியிருப்பின் 10 வது மாடியில் உள்ள ஒரு வீடு முழுவதுமாக தீக்கிரையானதாகவும் கூறப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் மூச்சுத்திணறல் தடுப்பு கருவிகளை அணிந்து கொண்டு புகை மூட்டப்பட்ட பிரிவுக்குள் எச்சரிக்கையுடன் சென்றனர். அந்த வீட்டில் எரிந்துகொண்டிருத்த தீ, இரண்டு நீர் ஜெட் மூலம் அணைக்கப்பட்டது. தீக்கு நேர் மேலே உள்ள ஒரு வீட்டில் 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் தரையில் கிடப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டனர். அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
மேலும் மற்றொரு 25 வயதான பெண் புகையை உள்ளிழுத்தால் அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் சுயநினைவுடன் காணப்பட்டார், இருப்பினும் அவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதே போல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 280 பேர் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இந்த பெரும் தீவிபத்து குறித்து சிங்கப்பூர் போலீஸ் படை அளித்த தகவலின்படி (SPF), 73 வயது முதியவர் ஒருவர் இந்த தீ சம்பவம் ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார் என்று கூறியுள்ளது. அந்த முதியவரும் அந்த குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தில் மேற்கொண்டு போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.