சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 28) ஒரு முதியவர் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் அறிவித்த நிலையில், அவரது உடல் பாயா லெபாரில் உள்ள ஒரு மாலில் உள்ள சிங்க்போஸ்ட் மையத்தில் உள்ள படிக்கட்டில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த மரண நிகழ்வில், அந்த முதியவர் படிக்கட்டுக்குள் நுழைந்தபோது, அவர் எப்படி உள்ளே நுழைந்தார். ஏன் அவரை யாரும் பார்க்கவில்லை என்பது போன்ற பல கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
என்ன நடந்தது?
திரு. சோ எங் தோங், 78 வயதான இந்த முதியவர் ஒரு ஓய்வு பெற்ற டாக்சி டிரைவர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்வதாக கூறிவிட்டு, நடைபாதையாக அவர் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் வெகு நேரகமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதட்டமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை செல்போனில் தொடர்புகொண்டுள்ளனர்.
ஆனால் பலமுறை அவர்களது தொலைபேசி அழைப்பை எடுக்காத அவர், இறுதியாக அடுத்த நாள் காலை (சனிக்கிழமை காலை) அவர்களது அழைப்பை எடுத்தார். அவர் தனது மகளிடம், “சிங்போஸ்ட்” மையத்தில் தான் தற்போது இருப்பதாகவும், அவரது கால்கள் சோர்வாக இருப்பதாகவும் கூறியுள்ளார். உடனே அவரை தேடி 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த மாலுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லாத நிலையில் உடனடியாக போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில் திரு. சோவின் உடல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தெற்கு லாபி பேஸ்மென்ட் 3ன் படிக்கட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அது பயன்பாட்டில் இல்லாத ஒரு கார் பார்க்கிங் அருகில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைக்கு வருகை தருபவர்கள் மற்றும் அங்குள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அந்த பேஸ்மென்ட் 3 கார்பர்க்கிங் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் போலீசாருக்கு திரு. சோ அசைவில்லாமல் படிக்கட்டில் கிடைக்கிறார் என்று தகவல் கிடைத்தது. துணை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை மூடப்பட்ட அந்த இடத்திற்கு அவர் எப்படி சென்றார் என்பது புரியாத புதிராகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.