மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட மிக பிரமாண்டமாக சேலத்தில் 146 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 140 அடி உயரத்தில் பத்துமலை முருகன் கோவில் உள்ளது. மலேசியாவுக்கு சுற்றுலா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்த கோவிலில் தரிசனம் செய்து வருவார்கள். உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முருகன் கோயில் இதுவாகும்.இந்த நிலையில், சேலம் மாவட்டம் சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், வாழப்பாடியை அடுத்து புத்திரகவுண்டன்பாளையத்தில், 146 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலை நிறுவப்பட்டு வருகிறது.
இந்த சிலையை, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த, ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் வடிவமைத்து வருகிறார்கள். ஸ்தபதி தியாகராஜன் திருவாரூரை சேர்ந்தவர். இவர் தலைமையில் மலேசியாவில் உள்ள முருகன் சிலையை விட பிரமாண்டமாக 146 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி சேலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சுமார் ஐந்து ஆண்டாகக் தினமும் 25 சிலை வடிவமைப்பு கலைஞர்கள் சிலையை வடிவமைக்கும் பணியைச் செய்து வருகின்றனர். தற்போது முழு உருவமும் அமைக்கப்பட்டு முழுமையாக வண்ணம் தீட்டும் பணியும் நிறைவடைந்தது. சிலையின் அருகே தற்போது ஒரு லிப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த லிப்ட் மூலம் பக்தர்கள் மேலே சென்று முருகன் சிலையின் கையில் உள்ள வேல் மீது பால் ஊற்றி அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த முருகன் சிலையை அமைத்து வரும் முருக பக்தர் ஸ்ரீதர், “இந்த முருகன் சிலையைச் சாதனைக்காக நான் கட்டவில்லை. முருகப் பக்தர்களைத் திருப்திப்படுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டேன். தமிழ் கடவுளான முருகனை அனைத்து தரப்பினரும் அதிகளவில் நேசிக்கின்றனர். கட்சிப் பாகுபாடின்றி இந்த பணியை ஆன்மீகம் என்ற அடிப்படையில் செய்து வருகிறோம். இந்த சிலை கட்டுமானத்தை 2016ல் எனது தந்தை முத்து நடராஜன் தொடங்கினார். இன்னும் 3 மாதத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கோவில் திறக்கப்படும்” என தெரிவித்தார்.
முருகன் சிலையை செய்து வரும் ஸ்தபதி தியாகராஜன் Behindwoods க்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மலேசிய முருகன் கோவில் பணிகளை, 2004ல் ஆரம்பித்து 2006ல் முடித்தோம். 3 ஆண்டுகளில் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. அந்த கோவில் கட்டும்போதே இது போன்ற கோவில் நமது தமிழ்நாட்டில் இல்லை என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தை ஆத்தூர் ஸ்ரீதர் நீக்கியுள்ளார்.
தற்போது சேலத்தில் உலகிலேயே மிகப்பெரிய முருகன் கோவிலை கட்டி வருகிறோம். யாரிடமும் நன்கொடை பெறாமல் முருகன் கோவில் கட்டப்பட்டு வருவதால், கட்டி முடிக்க 5 வருடம் ஆகியுள்ளது. மலேசிய கோவிலில் கையில் வேலுடன் காட்சியளிப்பார் முருகன். இங்கு பக்தர்களுக்கு ஒரு கையில் ஆசி வழங்கும் முருகன், மற்றொரு கையில் வேலுடன் இருப்பார். அதே போல் வேலைப்பாடுகளுடன் மாறியுள்ளன. உடலில் தங்கக்காப்பு போல செய்திருக்கிறோம். அதே போல் பஞ்ச வர்ண நிறங்களை தீட்டியுள்ளோம். மாலைகள் அணிந்திருப்பதும் சிறப்பாக இருக்கும். 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில் கட்டுவதால், தற்போதுள்ள அனைத்து தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி உள்ளோம்.
ஸ்ரீதர் சாரின் 100 ஏக்கர் நிலம் ஆத்தூரில் இருந்ததால், அந்த இடத்தில் கோவில் கட்ட அவர்கள் முடிவு செய்தனர். அப்போது கோவில் கட்ட ஒதுக்கிய இடம் பின்புறம் 300 ஆண்டுகள் பழமையான மடம் ஒன்று உள்ளது. அதனால் இங்கு கோவில் கட்ட விரும்பினர். இன்னும் 3 மாதத்தில் கோவில் கும்பாபிசேகம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும்.
கோவில் வளாகம், அமைப்பு, தேசிய நெடுஞ்சாலை ஆகியவை இந்த கோவிலின் சிறப்புகள். மக்கள் ஒரே நேரத்தில், 5 லட்சம் பேர் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள முடியும். அதற்கான இட வசதி உள்ளது. முருகன் கையில் உள்ள வேலுக்குள் மற்றொரு வேல் உள்ளது. அதில் லிப்ட் வசதியை பயன்படுத்தி பக்தர்கள் நேரடியாக அபிசேகம் செய்யலாம். அதே போல் அருகாமையில் முருகனை தரிசிக்கலாம்.
பத்துமலையில் 272 படிகள். அதில் படிகளில் ஏறும் ரோது முருகனை காணலாம். அதை விட இன்னும் அழகே 10 அடி தூரத்தில் பார்க்க இங்கே முடியும். கடிமான பணியை நன்றாக செய்துள்ளனர்.
மலேசிய சென்று பார்க்க விரும்பிய பக்தர்கள் இங்கே வந்து பார்க்கலாம். பழநி,சேலம், எடப்பாடி என சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமில்லாமல், உலகமெங்கும் உள்ள பக்தர்கள் வருவார்கள்.
இங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவிலேயே பெரிய நந்தி சிலை கட்டி வருகிறோம். அருள்திரு. ராஜவேல் சாமிகள் பெரிய சிவாலயம், நந்தி சிலை கட்ட வேண்டும் என என்னை கேட்டுக்கொண்டனர்.
கோவையில் 31 அடிக்கு தான் நந்தி சிலை உள்ளது. அது தான் இந்தியாவிலேயே பெரிய நந்தி சிலை. அதை விட கொஞ்சம் கூடுதலான அடி இருக்க வேண்டும் என நினைத்தோம். 6 மாத காலமாக செய்து வருகிறோம். சிவ பக்தர்கள் பொருள் உதவி செய்கிறார்கள். நந்திக்கு எதிர்புறமாக பெரிய சிவன் கோவில் செய்யலாம் என திட்டமிட்டோம்.அதற்கான பணிகள் நடந்து வருகிறது. 1250 நந்தியை தேர்வு செய்து அதிலிருந்து சிறந்த நந்தியை உருவாக்கி வருகிறோம். ஆர்வமும், பொருளும், காலமும் இருந்தால் தான் இந்த பணிகளை சிறப்பாக செய்ய முடியும்.
150 அடி உயரத்தில் முருகன் கோவில் அமைக்க வேண்டும் என தென் மாவட்டம் மதுரையில் கேட்டுள்ளனர். பெரிய சிலைகள் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி முறையாக ஆர்வத்துடன் செய்து வருகிறோம்” என உலகிலேயே பெரிய சிலைகளை செய்யும் நெகிழ்ச்சியுடன் ஸ்தபதி தியாகராஜன் தெரிவித்தார்.
தற்போதே ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், உலகிலேயே பெரிய முருகன் சிலை விரைவில் திறக்கப்படவுள்ளதால், இச்செய்தி முருக பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நந்தி சிலையின் செய்ய சொன்ன அருள்திரு.ராஜவேல் சாமிகள்,” சேலம் மாவட்டம், வாழப்படி அருகே வெள்ளாள குண்டம் பகுதியில், 2 ஏக்கரில் கோவிலுக்காக வாங்கிய இடத்தில் நந்தி சிலையை அமைத்து வருவதாக தெரிவித்தார். சிவபெருமான் கனவில் வந்து நந்தியும், சிவனை காட்டியதால், கோவில் கட்டுகிறேன்.
நந்தி கோவிலை கட்டத் தொடங்கி ஒரு வருடமாகிறது. அதிகபட்சம் ஜூனில் இந்த பணி நிறைவு பெறும். இதற்கு முன்பு கோவையில் உள்ள 31 அடி நந்தி தான் உயரமாக இருந்தது. ஆனால் 45 அடியில் தற்போது கட்டி வருகிறோம். குறைகளை சொன்னால் இந்த கோவிலில் தீர்வு கிடைக்கும். ராஜலிங்கேஸ்வரர் கோவிலில் நந்தி கட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. குழந்தை பாக்கியம், கடன் பிரச்சனை, திருமணம் நடக்காமல் இருப்பது போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி இந்த கோவிலுக்கு மக்கள் வருகின்றனர். நந்தி சிலை கட்டி முடிந்தவுடன், 162 அடி உயரத்தில் சிவன் சிலை செய்ய முடிவு செய்துள்ளோம். அதையும் ஸ்தபதி தியாகராஜன் தான் செய்ய உள்ளார். இந்த கோவிலை பார்க்க கோவை, சேலம் மட்டுமின்றி பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்களும் வருகின்றனர்.
வீடுகளில் சிறிய அளவில் லிங்கத்தை வைத்து வழிபடுவார்கள். லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபட சுத்தமாக இருக்க வேண்டும். மனதில் நினைத்ததை தருபவரே சிவன். வேண்டியதை கிடைக்க சிவனை வழிபடுவார்கள். அபிசேகம் பண்ணாமல் வீட்டில் சிவனை வைக்கக்கூடாது.
எல்லா அபிசேகத்தையும் சிவனுக்கு செய்யலாம். அதிகார நந்திகேஸ்வரர் கோவிலில் 18 சித்தர் வைக்க போகிறோம். அதற்குள் லிங்கம் வைக்க முடிவு செய்துள்ளோம். கூடிய விரைவில் அதிகார லிங்கத்தை பக்தர்கள் வழிபடலாம். இந்த கோவில் உருவாக சிவன் பக்தர்கள் தங்களால் முடிந்த பொருள் உதவிகளை செய்யலாம்” என அருள்திரு. ராஜவேல் சாமிகள் தெரிவித்துள்ளார்.