தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் நிலையில் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பேசிய பேச்சு பெரிய சர்சையாக வெடித்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும் என்டி ராமாராவ் அவர்களின் மகனுமான பாலகிருஷ்ணாவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றில் அவரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து கேட்ட கேள்விக்கு “யாரோ ரஹ்மான் என்பவர் ஆஸ்கார் விருது வாங்கியிருக்காராமே அவர் யாரென்றே எனக்கு தெரியாது” என ஆணவமாக பதிலளித்துள்ளார்.
மேலும் “விருதுகள் எப்போதும் என் கால் தூசுக்கு சமம், பாரத ரத்னா போன்ற விருதுகள் என் தந்தையின் சுண்டு விரலுக்கு சமம்” என்றும் அவர் பேசியிருக்கிறார்.
“ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முறை ஆஸ்கார் விருது வாங்கியதெல்லாம் பெரிதல்ல. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அவருடைய பாடல்கள் ஹிட் ஆகிறது. எங்கள் குடும்பம் திரையுலகுக்கு ஆற்றிய நன்மைகளுக்கு முன் எந்த விருதும் ஈடாகாது” என்று பேசியுள்ளார்.
இதோடு மட்டுமல்லாமல் “இப்படிப்பட்ட எங்கள் குடும்பத்துக்கு முன்னால் விருதுகள் தான் வெட்கப்பட வேண்டும்” எனவும் சர்ச்சையாக பேசியுள்ளார். அவர் ஸ்ரீ தேவி மற்றும் ஹாலிவுட் ஜேம்ஸ் கேமரான் ஆகியோர் பற்றியும் இப்படி விமர்சனங்களை முன்வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நடிகை ஸ்ரீ தேவிக்கு நடிக்க சொல்லித் தந்ததே தன்னுடைய தந்தை தான் என்றும், ஒரே படத்தை ஜேம்ஸ் கேமரான் போல 12 ஆண்டுகள் எடுக்காமல் ஒரே நேரத்தில் 3 படங்களை நடிக்கும் திறனும் ஆற்றலும் தனக்கு உள்ளதாகவும் அவர் பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
இப்படி தொடர்ச்சியாக நடிகர் பாலகிருஷ்ணா பேசி வருவது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.