சிங்கப்பூரில் River Valley என்ற உயர்நிலைப்பள்ளியில் சக மாணவர் ஒருவரின் மரணம் தொடர்பாக நான்காம் பருவ மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமை (ஜூலை 19) காலை 11.40 மணியளவில் பள்ளி அமைந்துள்ள 6 பூன் லே அவென்யூவில் இருந்து தங்களுக்கு உதவிக்கோரி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் போலீஸ் படை அப்போது தெரிவித்தது.
தகவல் அறிந்து அந்த பள்ளிக்கு உடனடியாக விரைந்த போலீசார் பள்ளியின் கழிப்பறையில் ஒரு முதல் பருவ மாணவன், உடலில் காயங்களுடன் அசைவற்ற நிலையில் இருந்ததை கண்டுள்ளனர். அந்த 13 வயது மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாக கூறினார். மேலும் அந்த சம்பவ இடத்தில் இருந்து ஒரு கோடரியை போலீசார் கைப்பற்றினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர் என்று பிரபல செய்தி நிறுவனமான CNA செய்தி வெளியிட்டது. இந்நிலையில் பல தரப்பில் இருந்தும், இறந்த அந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த பள்ளியில் இறந்த அந்த மாணவனுடன் படித்த மற்றும் அவனுக்கு வகுப்புகள் எடுத்த ஆசிரியர்கள் மிகுந்த வேதனையில் இருப்பதால் அவர்களுக்கு உளவியல் ரீதியான உதவிகளை வழங்கி வருவதாக கல்வித் துறை தலைமை இயக்குநர் திரு. வோங் சியூ ஹூங் தெரிவித்துள்ளார்.