மாதவன், கடந்த ஜூன் மாதத்தோடு 50 வயதை கடந்துவிட்டபோதும் என்றும் இளமை இன்றும் இளமை என்று கூறும் அளவிற்கு சில்லென்ற தோற்றத்துடன் வலம்வருகிறார் நமது Maddy. இன்றளவும் பெண்களின் கனவு நாயகர்கள் பட்டியலில் நிச்சயம் மாதவனுக்கு ஒரு இடம் உண்டு. பீகாரில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தை சேர்ந்த மாதவன் தனது 18வது வயதிலேயே ராஜாராம் கல்லூரியின் கலாச்சார தூதராக இருந்து பல வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
அதன் பிறகு ஹிந்தி மொழியில் பல சீரியல்களில் நடித்து வந்து மாதவன் ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் ஒருசில படங்களில் நடித்து வந்தார். ஆனால் சரியாக 2000மாவது ஆண்டு பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “அலைபாயுதே” என்ற படம் வெளியானது அதுவரை அந்த நடிகனின் மீது இருந்த பார்வை முற்றிலும் மாறியது. சாக்லேட் பாய் மாதவன் அன்று தான் அவதரித்தார் என்றால் அது சற்றும் மிகையல்ல.
மின்னலே, ரன், கன்னத்தில் முத்தமிட்டாள், டும் டும் டும் மற்றும் உலக நாயகனுடன் அன்பே சிவம் என்று வெறும் 2 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஸ்வரூபம் எடுத்தார் மாதவன். இறுதியாக தமிழில் மாறா படத்தில் நடித்த மாதவன் தற்போது “Rocketry – நம்பி விளைவு” என்ற பயோ பிக்கில் நடித்துள்ளார். 21 ஆண்டுகளுக்கு முன்பு மாதவனை எப்படி கொண்டாடினார்களோ அதே அளவிலான ரசிப்புத்தன்மையை குறையாமல் அளித்து வருகின்றார் மாதவன்.
இந்நிலையில் ட்விட்டர் பகுதியில் ரசிகர் ஒருவர் மாதவனின் இளைய வயது புகைப்படங்களை வெளியிட்டு “அந்த இளம் வயது மாதவன் என் நினைவில் வாடகை கொடுக்காமல் தங்கியுள்ளார்” என்று கூற “ஹே நான் வாடகை கொடுக்க ரெடி” என்று பதிலளித்துள்ளார் மாதவன்.