TamilSaaga

சிங்கையில் அறிமுகமான புது பாஸ் முதல் GST உயர்வு வரை… எக்கசக்க புது அறிவிப்புகள்… நேற்று ஜன.1 முதல் அமல்… என்னென்ன தெரிஞ்சிக்கோங்க

சிங்கப்பூரில் 2023ம் ஆண்டு முதல் நாளில் இருந்து சில கட்டுப்பாடுகளும், புதிய விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. அதுகுறித்து சின்ன தொகுப்பினை தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படித்து விடுங்கள்.

சிங்கையில் ஊழியர்களை பின்னால் அமர வைத்து அழைத்துச் செல்லும் புதிதாக பதிவு செய்யப்படும் லாரிகளில், இனி மழை கவர்கள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் லாரிகளுக்கு மேலும் 6 மாத காலம் அவகாசம் தரப்பட்டுள்ளது. இதனால் அந்த லாரிகள் இந்த நடைமுறையை ஜூலை 1க்குள் செயல்படுத்தினால் போதுமானது.

தொடர்ந்து, சிங்கப்பூரில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) 7 முதல் 9 சதவீதம் வரை இரண்டு நிலைகளில் அதிகரிக்கும் என 2022 ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் வோங் தெரிவித்து இருந்தார். இந்த அதிகரிப்பு ஒவ்வொரு முறையும் அதாவது ஜனவரி 1, 2023 மற்றும் ஜனவரி 1, 2024 அன்று ஒரு சதவீதம் என்று படிப்படியாக உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 1, 2023 முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு அரசாங்கக் கட்டணங்கள் எதுவும் ஏற்றப்படாது. ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட உரிமக் கட்டணங்களுக்கும், அரசு நிறுவனங்களால் விதிக்கப்படும் கட்டணங்களுக்கும் இது பொருந்தும். இதில் பள்ளிக் கட்டணங்களான தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் பாலிடெக்னிக் கட்டணம் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில் பல்கலைக்கழகங்கள் அல்லது அரசு சாரா நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் கட்டணங்களுக்கு இது பொருந்தாது.

சிங் போஸ்ட்டில் தபால் சேவைகளுக்கு 20கி மற்றும் 40கி எடை கொண்ட உள்நாட்டு கட்டணமாக முறையே 30 மற்றும் 37 செண்ட்கள் இப்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. இது முறையே 31 மற்றும் 38 செண்ட் ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. 2024 ஜனவரியில் 32 மற்றும் 39 செண்ட்களாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், ஊழியர்களுக்கான Onepass நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் ஒரே நேரத்தில் சிங்கப்பூரில் பல நிறுவனங்களைத் தொடங்கலாம், இயக்கலாம் மற்றும் பல நிறுவனங்களில் வேலையும் செய்யலாம். இந்த மாதத்தில் மேலும் பல புதிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts