சேலம் மாநகரில் 19 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படாததை கண்டித்து அதிமுகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் நிர்வாகிகளுக்கு வீடுகளுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக.,வினர் அவர்களின் வீட்டு வாசலில் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதுபோல் சென்னையிலும் சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, திமுக, ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை எனக் கூறி தமிழக அரசுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், எரிபொருள் விலை குறைப்பு, கல்விக்கடன் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை ஏன் நிறைவேற்றவில்லை என்றும் அதிமுகவினர் கேள்விகளை எழுப்பினர்.
மக்கள் கவனத்தை திசை திருப்பவே அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போட்டு வருகிறார் என்று கண்டன உரை ஆற்றினார்.
இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 1500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.