ஆன்லைன் சந்தையான Lazada 216 தனிப்பட்ட சிறிய காந்தப் பந்துகளைக் கொண்ட பொம்மையை தனது விற்பனை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
இதற்கு பின்னாலிருக்கும் காரணம் சற்று அதிர்ச்சியளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
ஆம்! சிங்கப்பூரில் உள்ள ஒன்பது வயது சிறுமி, Lazada மூலம் வாங்கப்பட்ட சிறிய காந்தப் பந்துகளை கடந்த மே மாதம் 9ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த போது விழுங்கிவிட்டார். நான்கு மணி நேர அவசர அறுவை சிகிச்சை செய்து, 3 மிமீ முதல் 5 மிமீ விட்டம் கொண்ட 14 பந்துகளை அவளது செரிமானப் பாதையில் இருந்து மருத்துவர்கள் அகற்றியதை அடுத்து Lazada இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த பந்துகளின் காந்த வலிமையால் ஒன்பது வயது சிறுமியின் சிறுகுடலில் ஓட்டையை ஏற்படுத்தியது. 3.5cm மற்றும் 6.5cm அளவுள்ள அவளது சிறுகுடலின் இரண்டு பகுதிகளும் கடுமையாக சேதமடைந்துவிட்டது.
ஏனெனில், சிறுமியின் குடலின் வெவ்வேறு பகுதிகளில் பந்துகள் இருந்தபோதும் காந்தப் பண்பால் அவை ஒன்றோடு ஒன்று ஈர்த்துக் கொண்டே இருந்ததால், சிறுமிக்கு நெஞ்சு குழாயில் அடைப்பு ஏற்பட்டு பலமுறை குமட்டல் மற்றும் வாந்தியை உண்டாக்கியது.
இதனால் இரண்டு வாரங்களாக அப்பெண் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவளால் சரியாக சாப்பிட முடியவில்லை. எடையும் கணிசமாகக் குறைந்தது. நிலைமை மேலும் மோசமாக, சிறுமிக்கு உடனடியாக Thomson Medical Centre-ல் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றனர்.
இதையடுத்து மருத்துவர்கள் சிறுமிக்கு நான்கு மணி நேர அவசர அறுவை சிகிச்சை செய்து காந்தப் பந்துகளை அகற்றினர்.
முன்னதாக, சிறுமியின் பெற்றோர், 216 காந்தப் பந்துகள் கொண்ட பொம்மையை, இ-காமர்ஸ் தளமான லாசாடாவில் இருந்து S$17க்கு வாங்கியதாக ST தெரிவித்துள்ளது. இந்த சூழலில் தான், தன்னிடம் உள்ள அனைத்து காந்தத்தன்மை கொண்ட விளையாட்டு பொம்மைகளையும் விற்பனை பட்டியலில் இருந்து Lazada நீக்கியுள்ளது.