இனரீதியான அவமதிக்கும் வகையில் சிங்கப்பூர் ரயிலில் பேசிய பெண்மணி ஒருவர், மனரீதியான குறைபாட்டுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
சிங்கப்பூரில் சமூக, மத, இனரீதியிலான நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசுவது கடுமையான குற்றமாகக் கருதப்படும். மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் பேசுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளும் அளிக்கப்படுவதுண்டு. இனரீதியிலான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் அதிகபட்சமாக 2000 சிங் டாலர்கள் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உண்டு.
இந்த நிலையில், வயதான பெண்மணி ஒருவர் சக பயணிகளை இனரீதியாக அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிங்கப்பூர் அரசு உடனடியாக விசாரணையை முடுக்கி விட்டது. விசாரணையில் ரயிலில் பேசிய பெண்மணி 59 வயதான Tan Beow Hiong என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்த முதற்கட்ட விசாரணையில் அவருக்கு delusionary disorder எனப்படும் மனரீதியிலான நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து விடுவித்தது. இதனால், இதே குற்றச்சாட்டை அவர் மீது மீண்டும் சுமத்த முடியாது. இதுபற்றி சிங்கப்பூர் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் விளக்கமளித்திருக்கிறது.
இதையும் படிங்க: 3 சிங்கப்பூர் டாலருக்கு வாங்கி 2,272 டாலர் லாபம் பார்த்த அதிர்ஷ்டசாலி… தங்க நிறத்தில் watch strap வாங்கியவருக்கு அசல் தங்கமே கிடைத்த யோகம்!
யூடியூபில் சேனல் ஒன்றை நடத்தி வரும் அவர் கடந்த ஏப்ரல் 2021 முதல் இனரீதியிலான அவமதிப்புக் கருத்துகளை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல், மே 11, 2021-ல் ரயில் ஒன்றில் இதுபோல் பொதுவெளியில் பேசியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக அவர் ஏற்கனவே இரண்டு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தற்போது அவர் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு பற்றி அவருக்குத் தெரியாது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல், சிறையில் காலத்தைக் கழிப்பதற்குப் பதிலாகக் கட்டாய சிகிச்சைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. ஆனால், அதை ஏற்கவும் அந்தப் பெண்மணி மறுத்துவிட்டதாக அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.