காதலித்துவிட்டு கல்யாணம் செய்ய மறுத்து, சிங்கப்பூருக்கு சென்ற காதலனை, விடாமல் துரத்தி தாலி கட்ட வைத்துள்ளார் இளம் பெண் ஒருவர்.
தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மணப்பட்டியை சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகள் ரம்யா. இவருக்கு வயது 22. மணப்பட்டிக்கு பக்கத்து ஊரான கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் அழகுராஜா. வயது 27. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். கண்டிப்பாக கல்யாணம் செய்வதாக ரம்யாவுக்கு வாக்குறுதி அளித்து நெருங்கி பழகி வந்துள்ளார் அழகுராஜா. இந்த சூழலில், வேலைக்காக சிங்கப்பூர் சென்ற அழகுராஜா, கடந்த 2019ம் ஆண்டு, மீண்டும் கோட்டைப்பட்டிக்கு திரும்பி வந்திருக்கிறார்.
தனது காதலன் ஊருக்கு வந்திருக்கும் தகவலை அறிந்த ரம்யா, தனது பாட்டி காந்திமதி என்பவருடன் சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அழகுராஜாவிடம் வலியுறுத்தி இருக்கிறார். இதனால் இரு தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட, இறுதியில் கைக்கலப்பில் முடிந்திருக்கிறது.
இதையடுத்து, கல்யாணம் குறித்து பேசச் சென்ற எங்களை அடித்துவிட்டதாக, அழகுராஜா மீது கொட்டாம்பட்டி போலீசில் ரம்யா புகாரளித்தார். இதன் பேரில் கைது செய்யப்பட்ட அழகுராஜா, சிறைக்கு செல்ல நேரிட்டது. பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.
இதற்கிடையே யாருக்கும் தெரியாமல், ஜாமீனில் வெளிவந்த அழகுராஜா மீண்டும் சிங்கப்பூர் தப்பிச் சென்றுவிட்டார். இதனால், அழகுராஜா மீது லுக்-அவுட் நோட்டீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த அழகுராஜாவை, விமான நிலைய போலீசார் கைது செய்து, கொட்டாம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனால் மீண்டும் கைது செய்யப்பட்ட அழகுராஜா, மேலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் நேற்று வெளியே வந்த அழகுராஜா, ஒருவழியாக தனது காதலியான ரம்யாவை சிறை வளாகத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் வைத்து தாலிக்கட்டி திருமணம் செய்துகொண்டார். பிறகு, கணவன் மனைவியாக அழகுராஜாவும், ரம்யாவும் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.