அடடா! சூப்பர்-ல என்று சொல்லும் அளவுக்கு ஒரு கல்யாணம் அரங்கேறியுள்ளது.
ஆம்! தமிழகத்தின் சேலம் மாவட்டம் வாழப்பாடி காசி படையாச்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் ஓய்வுபெற்ற அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சியாளர் ஆவார். இவரது மனைவி சுகந்தி. இந்த தம்பதியின் மூத்த மகள் பெயர் கிருத்திகா. பொறியாளரான இவர் சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரும் MNC நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சிங்கப்பூரில் தன்னோடு பணிபுரிந்து வந்த சக ஊழியர் அசானே ஒச்சோயிட் என்பவர் மீது கிருத்திகா காதல் வயப்பட்டுள்ளார். இவர் ஃபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரைச் சேர்ந்தவர். இவரது பெற்றோரின் பெயர் பென்னடி – அட்மா ஊஜேடி.
இதையடுத்து, காதலர்கள் இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் தங்கள் காதல் குறித்து புரிய வைத்துள்ளனர். வெவ்வேறு நாடு, வெவ்வேறு கலாச்சாரம் என்பதால் முதலில் இரு குடும்பத்தினரும் யோசிக்க, பிறகு இருவரும் நல்ல வேலையில், உயர் பதவியில், நல்ல சம்பளம் வாங்குபவர்கள் என்பதால் ஒப்புக் கொண்டனர்.
அதேசமயம், இருவரின் திருமணத்தை தமிழ் பாரம்பரிய முறைப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து மாப்பிள்ளையின் உறவினர்கள், திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே தமிழகம் வந்து, வாழப்பாடியில் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பெண் அழைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். தொடர்ந்து, சேலம் 5 ரோடு பகுதியிலுள்ள மண்டபத்தில் கடந்த 27ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு வந்திருந்த ஃபிரான்ஸ் நாட்டினர், பட்டு வேட்டி- சட்டை, பட்டு சேலை, தங்க ஆபரணங்கள், தோடு ஜிமிக்கி கம்மல் அணிந்து தமிழக முறைப்படி பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, மெதுவடை, வடகறி, சாம்பார், சட்னி, இடியாப்பம், அல்வா ஆகியவற்றை, ஃபிரான்ஸ் நாட்டினர் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
சேலத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வேலைப்பார்த்து, இப்போது ஃபிரான்ஸின் மருமகள் ஆகியுள்ள கிருத்திகாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், தமிழகத்துக்கு மாப்பிள்ளையான அசானே ஒச்சோயிட்டுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.