புதுச்சேரி கதிர்காமம் சுப்பிரமணியன் கோவில் வீதியில் சிங்கப்பூருக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் இயக்குனராக கிருஷ்ணகுமார் (வயது 46) என்பவர் உள்ளார்.
இதே நிறுவனத்தில் கடலூர் சிவலிங்கம் வீதியை சேர்ந்த ரெஜினா என்பவரும் வேலை செய்து வந்தார். இவர் நிறுவனத்தின் பெயரில் சிலர் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு அவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்ட சரியான வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மீண்டும் புதுவைக்கு வந்து நிறுவன இயக்குனர் கிருஷ்ணகுமாரை சந்தித்து புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக நிர்வாக தரப்பில் விசாரணை நடத்திய போது, ரெஜினா அந்த நிறுவனத்திற்கு தெரியாமல் பணத்தை வாங்கிக் கொண்டு ஆட்களை சிங்கப்பூர் அனுப்பி வைத்தது தெரியவந்தது.
இவ்வாறு 16 பேரிடம் இருந்து ரூ.14 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த நிறுவனத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் கோரிமேடு போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெஜினாவை வலைவீசி தேடி வருகின்றனர்.