தமிழ் புத்தாண்டையொட்டி சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற IndiGo 6E 7299 விமானத்தில் கேப்டன் பிரிய விக்னேஷ் என்பவர், தமிழ் மொழியில் தமிழ் மாதங்கள் தொடர்பான கவிதை கூறி பயணிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்த கவிதை மூலம் தமிழ் மாதங்களை வரிசையாக குறிப்பிட்டு அதன் பாரம்பரியத்தையும் விளக்கி அசத்தியுள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை பொதுவாக விமானங்களில் ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே பெரும்பாலும் அறிவிப்பு வெளியிடப்படும். இந்நிலையில் தனியார் விமான நிறுவனத்தில் கேப்டனாக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த பிரிய விக்னேஷ் விமான பயணத்தில் தமிழில் அறிவிப்பு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தன்று சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் கேப்டன் பிரிய விக்னேஷ் பணியில் இருந்தார். அப்போது அவர் கவிதை ஒன்றை பயணிகளிடம் வாசித்து, தமிழில் தனது புத்தாண்டு வாழ்த்துகளை கூறினார்.
அதுமட்டுமின்றி, அவர் தனது பாட்டியின் நினைவுகளையும், நம் பாரம்பரியத்தோடு இணைத்து அவர் சொல்லி கொடுத்த தமிழ் மாதங்களையும் கவிதை நடையிலேயே பயணிகளுக்கு எடுத்துரைத்தார்.
இதுகுறித்து பேசிய பிரிய விக்னேஷ், “அன்பான பயணிகளே… அனைவருக்கும் வணக்கம்… இன்று ஒரு சிறப்பான நாள்! இன்று தமிழ் புத்தாண்டு! இந்த இனிமையான நாளில் நான் இயற்றிய தமிழ் கவிதையை உங்களுக்காக வாசித்து காட்ட விரும்புகிறேன். தமிழும் அவளும் ஒரே. எங்கள் வீட்டில் புராதனமாய் எனது பாட்டி.. கால் இரண்டையும் நீட்டி… இப்படித்தான் அறிமுகப்படுத்தினாள் தமிழ் மாதங்களை எனக்கு.
மாதங்கள் வரிசையாக.. சித்திரையில் சிங்காரிச்சி வைகை ஆற்றில் வராரு அழகர் அய்யா… வைகாசியில் தான் அக்னி வெயில்… ஆனியில் தானே நீ பிறந்த… ஆடியில் புதுஜோடியை பிரிச்சி தானே ஆகணும்… ஆவணியில் எங்கள் அப்பா, ஆத்தா கல்யாண நாள்… புரட்டாசி பெருமாளுக்கு… ஐப்பசியில் அடைமழை… கார்த்திகையில் மலை தீபம்… மார்கழியும் மச்சும் குளிரும்… தையில் தரையும் குளிரும்… மாசிபச்ச மாசியில குடும்பத்தோடு போயாகணும் குலசாமிய கும்பிடுறதுக்கு… பங்குனியில் உத்திர திருவிழா, உனக்கும் பெரிய பரீட்சை… பதனிசா படிச்சுக்கய்யா.
தமிழ் புத்தாண்டு வாழ்த்து இப்படியாக அமுதும், தமிழும்போல அமையட்டுமே தமிழ் புத்தாண்டு, அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் என யாருமே எதிர்பார்க்காத வ வகையில் பிரிய விக்னேஷ் தனது வாழ்த்துரையை நிறைவு செய்ய, விமானம் கிழித்துச் செல்லும் காற்று கூட கைத்தட்டியது.