TamilSaaga

சிங்கப்பூரில் படித்து வளர்ந்து… கும்பகோணத்தையே கலக்கிய “ஹெலிகாப்டர் பிரதர்ஸ்” – அம்பானி ரேஞ்சுக்கு அசர வைத்து… தடம் தெரியாமல் காணாமல் போன வாழ்க்கை!

“ஹெலிகாப்டர் பிரதர்ஸ்”…. இந்த பெயரை தமிழகத்தில் உள்ள நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் யாரைக் கேட்டாலும் ஒரு நொடி ‘அவர்களா!?’ ‘ஜெர்க்’ ஆவார்கள்.

ஏனெனில்.. இந்த பிரதர்ஸ் செய்த ‘சம்பவம்’ அப்படி! சரி… இவர்கள் அப்படி என்ன செய்தார்கள் என்பதை பார்ப்பதற்கு முன்பு, யார் இந்த ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என்று பார்த்துவிடுவோம்.

யார் இந்த ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’?

திருவாரூர் மாவட்டம் மறையூர்தான் இவர்களது பூர்வீக கிராமம். இவர்களது தந்தை ராமதாஸ் மின்வாரியத்தில் உதவி பொறியாளராகப் பணிபுரிந்ததால் கும்பகோணம் மாதுளம்பேட்டையில் குடியேறினார். சில ஆண்டுகள் கழித்து பணியிட மாறுதலில் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டார்.

திருவாரூர் மாவட்டம் மறையூர் என்ற ஊரைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ் – ஸ்வாமிநாதன். இவர்களது தந்தை ராமதாஸ். மின்வாரியத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்தவர். பிறகு, இவர் குடும்பத்துடன் சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டார். இவரது மகன்களாகிய எம்.ஆர். கணேஷ், எம்.ஆர்.ஸ்வாமிநாதன் ஆகிய இருவரும் சிங்கப்பூரிலேயே படித்து வளர்ந்தனர்.

பிறகு, சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, கும்பகோணம் வந்த இருவரும், அங்கு பணக்காரர்களும், வி.ஐ.பி.களும் வாழும் ஸ்ரீநகர் காலனியில் சொந்தமாக வீடு கட்டி செட்டிலானார்கள். பிறகு, கொற்கை எனும் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பசுமாடுகளை இறக்குமதி செய்து, பால் பண்ணை ஒன்றை தொடங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து ‘விக்டரி ஃபைனான்ஸ்’ என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினார்கள். எம்.ஆர். கணேஷின் மகன் அர்ஜுனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்களைத் தூவி, மக்களை வியப்பில் ஆழ்த்தினர்.

அதோடு மட்டுமின்றி, கொற்கை பகுதியில் தங்களுக்கென தனி ஹெலிபேட் அமைத்தனர்.

மேலும் படிக்க – EXCLUSIVE: 40 கிலோ Luggage உடன் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி.. ஏர்போர்ட் வந்திறங்கிய பிறகு காத்திருந்த ஏமாற்றம்! – எழுதி கையெழுத்து வாங்கிய Scoot!

ஆம்புலன்ஸ் சேவைக்கும், சுற்றுலா செலவும் தங்கள் ஹெலிகாப்டர் வாடகைக்கு கிடைக்கும் என்று, ஒரு முக்கிய செய்தித்தாளில் பெரும் செலவு செய்து விளம்பரம் கொடுத்தார்கள். இதற்காக ‘அர்ஜுன் ஏவியேஷன்’ எனும் நிறுவனத்தையும் தொடங்கினார்கள். 20க்கும் மேற்பட்ட கார்கள், ஹெலிகாப்டர் பயணம், தங்களை அரண் போல் பாதுகாக்க ஏகப்பட்ட செக்யூரிட்டி கார்ட்ஸ் என்று ஷங்கர் பட பிரம்மாண்டங்களையே மிஞ்சினார்கள்.

இந்த சூழலில் தான் இவர்கள் மீது நிதி மோசடி புகார்கள் எழத் தொடங்கின. தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களை குறி வைத்து மோசடி செய்ய தொடங்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் என்று விளம்பரம் செய்தனர். அதுபோல், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு 1,82,000 ரூபாய் திருப்பிக் கொடுத்தனர். இதனால், கும்பகோணம் முழுவதும் இவர்களது இமேஜ் பரவியது.

போட்டிபோட்டுக் கொண்டு பொதுமக்கள் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதில், ஆச்சர்யம் என்னவெனில், மத்திய, மாநில அரசில் பெரும் பொறுப்புகளில் வேலைப்பார்த்து ஓய்வுப் பெற்றவர்களும் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்த சூழலில், ஹெலிகாப்டர் பிரதர்ஸ்களில் ஒருவரான எம்.ஆர்.கணேஷ், பாஜகவில் இணைந்தார். அவருக்கு வடக்கு மாவட்ட வர்த்தக தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்தது பாஜக. கும்பகோணத்திற்கு வரும் பாஜக பிரமுகர்கள், ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வீட்டுக்கு சென்று வரும் அளவுக்கு இவர்களது செல்வாக்கு உயர்ந்தது.

ஆனால், ஒருக்கட்டத்தில் இவர்கள் மீதான நிதி மோசடி புகார் பல்வேறு தரப்பில் இருந்து குவியத் தொடங்கியது. இந்த சூழலில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா – பைரோஜ் பானு தம்பதி ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ மீது ரூ.15 கோடி மோசடி புகார் அளித்தனர். ஏற்கனவே பொதுமக்களும் மோசடி புகார் அளித்த நிலையில், கும்பகோணம் முழுக்க ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ ரூ.600 கோடி அளவிற்கு மோசடி செய்துவிட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டது. இதையடுத்து, எம்.ஆர். கணேஷை கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜக அறிவித்தது.

நிலைமை மோசமானதும், ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ உடனே தலைமறைவாக, பட்டுக்கோட்டையில் வேறு ஒருவரது பண்ணை வீட்டில், மாதம் 13,000 வாடகைக்கு தலைமறைவாக தங்கியிருந்த நிலையில், போலீசாரால் கடந்த வருடம் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு தான் மற்றொரு அதிர்ச்சியான உண்மையும் வெளிச்சத்துக்கு வந்தது. 15 வருடங்களுக்கு முன்பே, இவர்கள் மெகா மோசடி சிக்கியது அம்பலமானது. அதாவது, சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதற்காக பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து சிக்கியது தெரிய வந்தது. இந்த வழக்கில் இவர்களது பெற்றோர், ராமதாஸ், வேதவல்லி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு 10 நாட்கள் சென்னை சிறையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, 16.04.2008-ல் வெளியான ஜுனியர் விகடன் பத்திரிகையில் ‘அம்பி’களை அம்போவாக்கும் அடேங்கப்பா மாமி!’ என்ற தலைப்பில் செய்தி வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு, கடந்த ஜனவரி மாதம் தான் எம்.ஆர் கணேஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஒரு சாதாரண மின் ஊழியரின் குடும்பத்தில் பிறந்து, சிங்கப்பூரில் படித்து வளர்ந்து, கும்பகோணத்தில் வந்து தொழில் தொடங்கி, குறுகிய காலத்தில் பிரபலமாகி, கடைசியில் தலைமறைவாகி கைதாகும் நிலைக்குச் சென்ற ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’, ஒருவர் எப்படி திறமையாக முன்னேற வேண்டும் என்பதற்கும் எடுத்துக்காட்டு, ஒருவர் எப்படி வாழக் கூடாது என்பதற்கும் எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts