சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, “இனி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் மார்ச் 31 அன்று இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன் அவர்கள் எடுக்கவேண்டிய “Pre Departure Test மட்டும் எடுத்தாலே இனி சிங்கப்பூருக்குள் நுழைய முடியும். ஆகவே இனி Entry Approval பெறவேண்டிய அவசியம் இருக்காது (தனிமைப்படுத்துதலும் இல்லை).
சிங்கப்பூர் அதன் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கையில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்திய உள்பட பிற நாட்டு பயணிகள் இனி எந்தவித கவலையும் இல்லாமலும், VTL போன்ற குறிப்பிட்ட விமானங்களை மட்டுமே நம்பியிராமல் சிங்கப்பூர் வர முடியும்.
அதாவது, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சிங்கப்பூருக்கு பயணிகளின் வருகை அதிகரிக்க உள்ளது. இந்நிலையில், சாங்கி விமான நிலையத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து Changi Airport Group வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “இனி, பயணிகள் சாங்கி விமான நிலைய டெர்மினல்களில் சுதந்திரமாக அனைத்து இடங்களுக்கும் செல்ல அனுமதிக்கும் வகையில் அதன் வருகை நடைமுறைகள் எளிதாக்கப்படுகிறது.
முன்னதாக, வந்திறங்கும் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு இடையேயான தொடர்பைக் குறைப்பதற்காக, டெர்மினல்களில் பயணிகளை வாழ்த்துச் சொல்லி அனுப்பவோ அல்லது வரவேற்கவோ நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தற்போது புதிய அறிவிப்பின் படி, பயணிகளைச் சந்தித்து வாழ்த்து சொல்ல விரும்புவோர் சாங்கியின் arrival hall-க்குள் நுழைவதில் இப்போது எந்தத் தடையும் இல்லை. டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 3 இல் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், தங்கள் சாமான்களை luggage-களை சேகரித்த பிறகு. உடனடியாக தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திக்கலாம். அவர்கள் ஏப்., 1ம் தேதி முதல் வருகை சோதனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோல், பயணிகள் இப்போது விமான நிலையத்திலிருந்து பொதுப் பேருந்துகள் அல்லது MRT-ஐ பயன்படுத்தலாம். டாக்சிகள், தனியார் வாடகை கார்கள் மற்றும் தனிப்பட்ட போக்குவரத்தையும் பயன்படுத்தலாம்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து பயணிகளும் ஏப். 1 முதல் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் முன் டெர்மினல்களில் உள்ள எந்த கடையில் வேண்டுமானாலும் உணவருந்தலாம். சாங்கி ஜூவல் உள்ளிட்ட கடைகளில் பர்சேஸ் செய்யலாம்.
தற்போது, டெர்மினல் 1 மற்றும் 3 போக்குவரத்து பகுதிகளில் உள்ள 65 சதவீத கடைகள் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளன. மேலும் சில கடைகள் விரைவில் திறக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, டெர்மினல் 1 மற்றும் 3 வருகை அரங்குகளில் உள்ள Lotte Duty Free கடைகள் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் மீண்டும் திறக்கப்படும்.