அண்மையில் நீங்கள் சிங்கப்பூரின் சாங்கி கடற்கரைக்கு சென்றிருந்தால் நிச்சயம் அந்த நீலநிற அலைகளை கண்டிருப்பீர்கள். சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாகவே சமூக ஊடகங்களிலும் இந்த சம்பவம் குறித்து வைரலாக பேசப்பட்டு வருகின்றது. அந்த நியான் ப்ளூ நிற அலைகளின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
இந்த அதிசய நிகழ்வை காண பலநூறு மக்கள் தற்போது சாங்கி கடற்கரைக்கு வரத்துவங்கியுள்ளனர், இதனால் அந்த வழியில் போக்குவரத்துக்கு நெரிசலும் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இணையத்தில் இந்த அதிசய அலைகள் குறித்து அதிகம் பேசப்பட்ட நிலையில் நேற்று மார்ச் 26ம் தேதி சாங்கி கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு சுமார் 1 மணி வரை மக்கள் அங்கு குழுமியிருந்ததை பார்க்க முடிந்தது.
அந்த பகுதிக்கு சென்ற பேஸ்புக் பயனர் ஹேடன் டான் என்பவர் போக்குவரத்து நெரிசல் லோயாங் வரை நீண்டுள்ளது என்று கூறினார். “பயணக் கட்டுரையாளரும்” முன்னாள் லியான்ஹே ஜாவோபாவோ பத்திரிகையாளருமான யாப் சியோவ் சூங்கும் சாங்கி கடற்கரைக்குச் செல்ல முயற்சித்ததைப் பற்றி பதிவிட்டுள்ளார், “ஏராளமான மக்கள் இந்த அலைகளை காண வந்ததால், நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் காத்திருந்தும், வாகனம் நிறுத்த இடம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த நீல நிறமானது டைனோஃப்ளாஜெல்லட்டுகள் எனப்படும் ஒரு வகை பிளாங்க்டனால் (Plankton) உருவாக்கப்படுகிறது. இது ஒரு வகை ஆல்கா (ஒரு வகையான கடற்பாசி), இந்த சிறிய கடல் உயிரினங்கள் ஒரு இரசாயன எதிர்வினை மூலம் பயோலுமினென்சென்ஸ் எனப்படும் பிரகாசமான நீல ஒளியை உருவாக்குகின்றன. இதுவே அவர் பெரிய அளவில் கூடும்போது அவை மனிதர்களின் கண்ணுக்கு புலப்படும் அளவிற்கு நீல நிறத்தில் காட்சியளிக்கும்.
ஆனால் நேற்று சனிக்கிழமை இரவு, மக்கள் தண்ணீரில் மணல் மற்றும் கற்களை வீசுவதைக் காணமுடிந்தது. இப்படி செய்வதால் அந்த நீல நிறம் கண்களுக்கு புலப்படும் என்று மக்கள் எண்ணியதாக தெரிகின்றது. ஆனால் மக்கள் எவ்வளவு முயன்றாலும் அந்த பாசிகள் இல்லையென்றால் நீல ஒளி தெரியாது என்பது தான் உண்மை.