மேம்போக்காக சிகிச்சை அளித்ததன் காரணமாக, சிங்கப்பூரில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கட்டுமான ஊழியராக பணியாற்றி வந்தவர் சேவியர். இவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு கடந்த 2014ம் ஆண்டு ‘சோரியாசிஸ்’ எனும் தோல் அலர்ஜி ஏற்பட, அவரது முகம், கைகால்களில் தடிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, 2014 அக்டோபர் – நவம்பர் மாதங்களில் சிங்கப்பூரில் மூன்று வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டதாக தெரிகிறது. அந்த மூன்று மருத்துவமனைகளிலும் அவருக்கு சோரியாஸிஸ் இருந்தது கண்டறியப்பட்டது. அதற்காக அவருக்கு ஆயிண்ட்மென்ட்களும் வழங்கப்பட்டிருக்கிறது.
அப்படி ட்ரீட்மெண்ட் எடுத்தும், அந்த அலர்ஜி அவருக்கு குணமடையவில்லை. இதனால், அதே 2014ம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் உள்ள ‘தேக்கா கிளினிக்’கிற்கு சேவியர் சென்றிருக்கிறார்.
அவரை பரிசோதித்த மருத்துவர் ஹரிதாஸ் (77), சோரியாசிசால் சேவியர் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தார். பிறகு அவருக்கு ஊசி போட்டு, சில மாத்திரைகளையும் கொடுத்தார். அப்படி அளிக்கப்பட்ட சிகிச்சையில் ‘எம்டிஎக்ஸ்’ என்பதும் ஒன்று. இது புற்றுநோய்ச் சிகிச்சையிலும் கடும் சோரியாசிசைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், இது கடும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் மருந்தாகும். குறிப்பாக, சிறுநீரகப் பிரச்சினை இருப்போருக்குத் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த மருந்தை கொடுக்க வேண்டும்.
ஆனால், சேவியருக்கு முறையான மருத்துவ பரிசோதனைகளை செய்யாமல், மருத்துவர் ஹரிதாஸ் அந்த மருந்தை கொடுத்திருக்கிறார். சேவியருக்கு ஏற்கனவே சிறுநீரக பிரச்சனை இருந்திருக்கிறது. பரிசோதனை செய்யாததால் இந்த விஷயம் மருத்துவருக்கு தெரியவில்லை.
ஏற்கெனவே சிறுநீரகப் பிரச்சினை இருந்ததைக் கண்டறியத் தவறிவிட்டார் என்றும் கூறப்பட்டது. இதனால், சேவியருக்கு கடும் பக்க விளைவுகள் ஏற்பட, பூஞ்சைத் தொற்று காரணமாக, 2014 டிசம்பர் மாதம் உயிரிழந்துவிட்டார்.
இதனால், தனியார் மருத்துவரான ஹரிதாஸ்மீது முதலில் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் அந்த குற்றச்சாட்டு குறைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவர் ஹரிதாஸுக்கு $1,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.