சிங்கப்பூரில் சுமார் 92 சதவீதத்துக்கும் அதிகமான பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் கடந்த 2021ல் அவர்களது பட்டப்படிப்பு அல்லது தேசிய சேவையை முடித்த ஆறு மாதங்களுக்குள் வேலைகளைப் பெற்றுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றது. மேலும் இது கடந்த 2020ல் இருந்த 87.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் அதிக விகிதமாகும். நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 13) வெளியிடப்பட்ட பாலிடெக்னிக் பட்டதாரி வேலைவாய்ப்பு கணக்கெடுப்பின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியான பட்டியலின்படி பணியில் சேர்ந்தவர்களில், 58.1 சதவீதம் பேர் முழுநேர வேலைகளில் இணைந்துள்ளனர். இந்த அளவு 2020ல் 52 சதவீதமாக இருந்தது என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றது. சரியாக 7,566 பாலிடெக்னிக் பட்டதாரிகளிடமிருந்து பதில்கள் சேகரிக்கப்பட்டன. Ngee Ann பாலிடெக்னிக், சிங்கப்பூர் பாலிடெக்னிக், நன்யாங் பாலிடெக்னிக், டெமாசெக் பாலிடெக்னிக் மற்றும் ரிபப்ளிக் பாலிடெக்னிக் ஆகியவை இணைந்து இந்த வருடாந்திர கணக்கெடுப்பை நடத்துகின்றன.
முழுநேர வேலையில் இருப்பவர்களின் சராசரியாக மொத்த மாதச் சம்பளமாக கடந்த 2020ல் S$2,400-லிருந்து இந்த 2021ல் S$2,500 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 2019 மற்றும் 2020க்கு இடையில் இந்த புள்ளிவிவரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஹெல்த் சயின்ஸ் மற்றும் இன்ஃபர்மேஷன் அண்ட் டிஜிட்டல் டெக்னாலஜிஸ் படிப்புகளின் பட்டதாரிகளின் சராசரி மொத்த மாத சம்பளம் ஒட்டுமொத்த சராசரி எண்ணிக்கையை விட “தொடர்ந்து அதிகமாக” இருப்பதாக கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன.
மேலும் பகுதிநேர வேலையில் சேர்ந்துள்ள பட்டதாரிகளைப் பொறுத்தவரை, மேற்குறிப்பிட்ட விகிதம் 2020ல் 31.6 சதவீதத்திலிருந்து 2021ல் 29.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. பட்டப்படிப்பு முடிந்து ஆறு மாதங்களுக்குப் பிறகும் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை 2020ல் 12.6 சதவீதத்திலிருந்து. அது தற்போது 2021ல் 7.8 சதவீதமாகக் குறைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. “கடந்த ஆண்டில் பல நிச்சயமற்ற நிலைகளை எதிர்கொண்ட போதிலும், புதிய மற்றும் பிந்தைய தேசிய சேவை பட்டதாரிகளுக்கான சராசரி சம்பளம் அதிகரித்துள்ளது. இது எங்கள் பாலிடெக்னிக் பட்டதாரிகளின் திறன்கள் மற்றும் அறிவின் மீது முதலாளிகளின் நம்பிக்கையை தெளிவாக பிரதிபலிக்கிறது” என்று ஆய்வுகள் கூறுகின்றன.