மக்கள் தொகை சரிவை சமாளிக்க அல்லது சரிக்கட்ட, ரஷ்ய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
ஆம்! ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த பிப்ரவரி 24 தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. 6 மாதங்களாகியும் இன்னும் இந்த போர் முடிவுக்கு வரவில்லை.
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதேசமயம், உக்ரைன் ராணுவமும் இன்னமும் விடாப்பிடியாக போராடிக் கொண்டிருக்கிறது.
நாட்டு மக்களுடன் இணைந்து, ரஷ்ய படைகளை எடுத்து வருகிறது. இதில், கிட்டத்தட்ட 50,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.
இதுஒருபுறம் இருக்க, கொரோனா பெருந்தொற்று காரணமாக ரஷ்யாவில் பலர் இறந்துள்ளனர். இதனால், மக்கள் தொகை சரிவை ஈடுகட்டும் நோக்கில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ரஷ்யாவில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.13 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணம், தங்களின் 10வது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்தவுடன், குழந்தையின் தாயிடம் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, இந்த 10 குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களுக்கு சோவியத் சகாப்த விருது (தாய் நாயகி) என்றும் அரசு அறிவித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அரசு கொடுக்கும் 13 லட்சத்துக்காக 10 பிள்ளைகளை பெற்றுக் கொண்டு வளர்க்க முடியுமா? இது மிகவும் பிற்போக்குத்தனமான அறிவிப்பு. நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சனையில், ஒருவர் 10 குழந்தைகளை பெற்றுக் கொண்டு பிச்சையெடுப்பதா? என்ற ரீதியில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.