TamilSaaga
Pudugai brothers

“புதுகை பிரதர்ஸ்”… 12 வருடங்களாக சிங்கப்பூரில் யாராலும் அசைக்க முடியாத கபடி அணி.. கால் வைக்கும் இடமெல்லாம் வெற்றி! ஜெயிக்கும் பணத்தை அப்படியே சேமிக்கும் ஒரே டீம்! வேற லெவல் நீங்க!

கபடி.. கபடி.. என்று பாடிக் கொண்டே எதிரணியின் எல்லையை கடந்து செல்வதற்கே தனி தைரியம் வேண்டும். மனதளவிலும், உடல் அளவிலும் அப்படிப்பட்ட தில்லும், தெம்பும் உள்ளவர்களே கபடி எனும் ஆட்டத்தை விளையாட முடியும். கொஞ்சம் பயந்தாலும்…. கொஞ்சம் அசந்தாலும், முட்டி மோதி தூக்கி எறிந்து விடுவார்கள் எதிரணியினர்.

தமிழர்களின் அப்படிப்பட்ட வீர விளையாட்டான கபடியை நமது சிங்கப்பூரில், கடந்த 12 வருடங்களாக விளையாடி, யாருமே ஜெயிக்க முடியாத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது “புதுகை பிரதர்ஸ்” எனும் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கபடி அணி.

ஆம்! இவர்கள் கபடி போட்டிகளுக்காக சிங்கப்பூரில் கால் வைக்காத இடமும் இல்லை… வெற்றிப் பெறாத தொடரும் இல்லை. போர்களின் போது வெகுண்டெழுந்து பிளிறும் ராஜ ராஜ சோழனின் வீர சேனைகளைப் போல, சீறிப் பாயும் அம்புகளைப் போல, மகன் ராஜேந்திரன் சோழனின் வாள் வீச்சைப் போல சுற்றி சுழலும் 7 வீரர்களைக் கொண்டு, எதிரணிகளை சிதறடித்து வருகிறது “புதுகை பிரதர்ஸ்” அணி.

சிங்கப்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்த IA RED DOT SPORTS CARNIVAL 2022 தொடரில், 7 அணிகளுடன் மோதி இறுதிப் போட்டியில் அசுர பலம் வாய்ந்த வடுவூர் கபடி அணியை தட்டித் தூக்கி, வென்று சாம்பியன் பட்டத்தை வென்றதே புதுகை பிரதர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு சான்று.

யார் இந்த புதுகை பிரதர்ஸ்?

தமிழ்நாட்டின் சோழ மன்னர்கள் ஆண்ட வீரமும், செழிப்பும் நிறைந்த மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. தஞ்சையை ஆட்சி புரிந்த ராஜ ராஜ சோழனின் ஆளுகைக்கு உட்பட்ட மண் இது.

அப்படிப்பட்ட புதுகை மண்ணில் இருந்து சிங்கப்பூர் வந்து கபடி அணியை உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து அந்த அணியின் வீரர் பாண்டிகண்ணன் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தித் தளத்துக்கு அளித்த பேட்டியில், “புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுக்கா கடியாப்பட்டி மற்றும் கோனாப்பட்டு ஆகிய இந்த இரண்டு கிராமங்களையும் சேர்ந்த வீரர்கள் தான் சிங்கப்பூருல கபடி விளையாடிக்கிட்டு இருக்கோம். இந்த இரண்டு கிராமங்களும் ரொம்ப பக்கம் பக்கமாக இருக்கும். அதனால, ஊருல விளையாடுறப்பவே ஒண்ணா சேர்ந்து தான் விளையாடுவோம்.

அதுக்கப்புறம் சிங்கப்பூர் வந்துட்டு, ஒரு டீம் செட் பண்ணனும்-னு யோசிச்சோம். அப்படி ஆரம்பிச்சது தான், புதுகை பிரதர்ஸ் டீம். இந்த டீம்லயும் கடியாப்பட்டி, கோனாப்பட்டு ஊரைச் சேர்ந்த பசங்க மட்டும் தான் இருக்கோம். கடியாப்பட்டி ஒரு 5 பேரு, கோனாப்பட்டு-ல 2 பேர்-னு தான் டீம் செட் பண்ணி விளையாடிக்கிட்டு இருக்கோம். இன்னைக்கு, நேத்து இல்ல. 2010-ல ஆரம்பிச்ச டீம் இது.

அதே 2010ல சிங்கப்பூருல ஒரு ஸ்கூல் மேட்ச் விளையாடுனோம். அதில் 2500 வெள்ளி பரிசு ஜெயிச்சோம். அதுதான் சிங்கப்பூருல நாங்க முதன் முதலா பரிசோட ஜெயிச்ச மேட்ச். அன்னைக்கு ஜெயிச்சதிலிருந்து இன்னைக்கு வரை, சிங்கப்பூரில் நாங்க பரிசு வாங்காத இடமே கிடையாது. சிங்கப்பூருல இதுவரை எத்தனை டோர்னமெண்ட் நடத்தி இருக்காங்களோ, அனைத்துலயும் எங்க டீம் Prize அடிச்சிருக்கு.

சிங்கப்பூருல இப்போ நிறைய டீம் இருக்கு. கிட்டத்தட்ட 50, 60க்கும் மேல டீமுங்க இருக்கு. ஆனால், எல்லாம் டீமும் எப்போதும் standard-ஆ ஒரே பிளேயர்ஸ் வச்சு விளையாடுறது கிடையாது. ஒரு பிளேயர் நல்லா விளையாடுனா, உடனே அவங்களோட டீமுக்கு அந்த பிளேயரை கூப்பிட்டு வந்து விளையாட வைப்பாங்க. ஆனா, நாங்க எப்போதும் எங்களோட பிளேயர்ஸோட மட்டும் தான் களமிறங்குவோம். ஜெயிக்கிறது, தோக்குறது எல்லாமே எங்களோட தான். ஒரு பிளேயர் வெளில நல்லா விளையாடுறார்-னு அவரை எங்க டீமுல வச்சு விளையாட மாட்டோம்.

அதேமாதிரி, கிட்டத்தட்ட 12 வருஷமா சிங்கப்பூர்ல கபடி விளையாடிக்கிட்டு இருக்கோம். இத்தனை வருசத்துல இதுநாள் நாள் வரைக்கும், கபடில ஜெயிச்ச பணத்தை நாங்க யாரும் பிரிச்சு எடுத்துக்கிட்டதே கிடையாது. எங்களோட தனிப்பட்ட செலவுகளுக்காக நாங்கள் அந்த பணத்தை செலவு செய்ததே கிடையாது. அந்த பணம் அப்படியே எங்களோட சேமிப்புல இருக்கு. கபடி விளையாட்டுல, எங்க பிளேயர்ஸ் யாருக்காவது அடிபட்டாலோ, கை, கால்களில் காயம் ஏற்பட்டாலோ, அதுக்கான மருத்துவ செலவுக்காக அந்த பணத்தை நாங்க சேமிச்சு வச்சிருக்கோம்.

சிங்கப்பூர்ல வேற எந்த டீமும் இந்த மாதிரி பணத்தை சேமித்து வச்சதில்ல. போட்டியில ஜெயிக்குற பணத்தை அப்படியே ஷேர் பண்ணிக்குவாங்க. ஆனா, அவன்களுக்குனு ஒரு savings இருக்காது. ஆனா, எங்க டீமுல அப்படி கிடையாது. இத்தனை வருஷமா நாங்க விளையாடி ஜெயிச்ச பணம் எல்லாம் அப்படியே எங்க வங்கி கணக்கிலேயே இருக்கு.

சிங்கப்பூர்ல எங்களோட தனிப்பட்ட ஆர்வத்துல தான் டீம் சேர்த்து கபடி விளையாடுறோம். நம்ம ஊர்-னா பரவால்ல. அடிப்பட்டா கூட, பெத்தவங்க இருக்காங்க, பார்த்துக்குவாங்க. ஆனால், சிங்கப்பூர்ல அப்படி கிடையாது. எனக்கு அடிப்பட்டா, என் பெத்தவங்களால வந்து கூட என்னை பார்க்க முடியாது. இங்க நம்மளை நாம தான் பார்த்துக்கணும். அதுக்காக தான் நாங்க ஜெயிக்கிற பணத்தை சேமிச்சு வச்சுக்குறோம்.

இந்த சூழல்ல கடந்த 2018க்கு அப்புறம் எங்களால கபடி விளையாட முடியல. இடையில 2 வருஷம் கொரோனா வந்ததால, எங்க பசங்க ஊருக்கு போயிட்டாங்க. இந்த வருஷம் தான், ஊருல இருந்து புதுசா சில பசங்க வந்தாங்க. நாலு வருஷமா கபடி விளையாடாம இருந்தோம். இந்த நேரத்துல தான், சமீபத்தில் IA RED DOT SPORTS CARNIVAL 2022 தொடர் சிங்கப்பூர்ல அறிவிச்சாங்க. இதுல கபடி போட்டிகள்ல பங்கேற்க நாங்க பெயர் கொடுத்திருந்தோம். ஆனா, நாலு வருஷமா விளையாடாம இருந்ததால, எங்களால என்ன பண்ண முடியும்-னு கேட்டாங்க.

சில வெளிப்படையாவே நாங்க இந்த டோர்னமெண்ட்ல கலந்துக்க கூடாதுன்னு சொன்னாங்க. ஆனா, ஒருவழியா போராடி கலந்துக்கிட்டோம்.

எல்லாம் டீமையும் தோற்கடிச்சு, Finals-ல வடுவூர் டீமையும் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஜெயிச்சோம். எங்களால என்ன பண்ண முடியும்-னு ஏளனமா பேசுனவங்க எல்லாம், எங்களோட Come Back பார்த்து அசந்துட்டாங்க” என்றார்.

ஜெயிக்கிறது மட்டுமில்லாம, பணத்தை சேமிக்குற அந்த பக்குவம் தான் உண்மையில் நம்மை வியக்க வைக்கிறது. கங்கிராட்ஸ் புதுகை பிரதர்ஸ். தொடர்ந்து கலக்குங்க!

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts