TamilSaaga

கட்டுப்படுத்தவே முடியாத கூட்டம்… நேற்று ஒரே நாளில்.. உலகத் தமிழர்களை ஒரே இடத்தில் கொண்டு வந்து சேர்த்த “பச்சையம்மன்”! – மலேசிய அரசையே பிரமிக்க வைத்த கும்பாபிஷேகம்

மலேசியாவின் தைப்பிங் (taiping) பகுதியில் பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் பச்சையம்மனை காண கோடி கண்கள் வேண்டும். ஆம்! தைப்பிங் ஸ்ரீ மஹா பராசக்தி பச்சை அம்மன் ஆலயத்தில் நேற்று (ஆக.21) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட
பல சங்கதிகள் போட
முன்பு செய்த வினை ஓட
இங்கு தஞ்சமுகம் தங்க
வெள்ளி குஞ்சரங்கள் பாட
ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

என்று பக்தர்கள் அருள் கொண்டு பாட, தைப்பிங் நகரமே விழாக்கோலம் பூண்டது.

பச்சை அம்மன் கோவில் வரலாறு

மலேசிய மக்கள் மத்தியில் Taiping Pachaiamman Temple என்று பக்தியோடு அழைக்கப்படும் இந்த கோவிலின் அம்மன் சிலை, அந்த காலத்தில் கைகளாலேயே உருவாக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு, அதே சிலையை 68 அடி உயரத்துக்கு எழுப்பி, பார்த்தாலே பக்தி பரவசத்தால் ஆட்கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய சிலையை வடிவமைத்துள்ளனர்.

இந்த கோயிலின் சிறப்பம்சமே, கோயிலும் பச்சை நிறத்திலும், அம்மனும் பச்சை நிறத்தில் தான் இருப்பார். இந்த பூலோகத்தில் பார்வதி அம்மனாக அவதாரம் எடுக்கும் போது, தண்ணீர் வறட்சி, பஞ்சம் என்று மோசமான சூழல் நிலவியதால் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிய, பார்வதி தேதி மேலோகத்திற்கு சென்றார். அப்போது விநாயகரும், முருகப் பெருமானும் வாழை மரம் கட்டி, பார்வதி தேவியை வரவேற்றதால், அவர் பச்சை நிறத்திலான அம்மனாக உருவெடுத்தார் என்பது ஐதீகம்.

இதையே விஞ்ஞானப்பூர்வமாக சொல்வதென்றால், பசுமை நிறைந்த இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இருப்பதால், பச்சை அம்மன் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. காவடி, அலகு குத்துதல், தீமிதி போன்றவை இந்த கோவிலில் பிரசித்தம். பெண்கள் இந்த கோவிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவார்கள். இந்த கோயில் 140 வருட பழமையான கோவில் என்பது கூடுதல் தகவல்.

குவிந்த கூட்டம்

நேற்றைய தினம் நடந்த கும்பாபிஷேகத்தில், பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பாதுகாப்புக்கு இருந்தவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

பச்சை அம்மனை கண்டு பல பெண்கள் சாமி வந்து ஆட, யாரால் என்ன செய்ய முடியும்? மலேசியாவின் உலகப்புகழ் பெற்ற முருகன் கோவிலுக்கு அடுத்த படியாக, ஒட்டுமொத்த மலேசியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது மகா பராசத்தி பச்சை அம்மன் ஆலயம்.

வியந்த மலேசிய அரசு

இந்த கும்பாபிஷேகத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க மிகப்பெரிய தீயணைப்பு லாரி கொண்டு வரப்பட்டிருந்தது. அதேபோல், ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டிருந்தன. தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் கூட, மக்கள் கூட்டம் வெள்ளமாக அலைமோதியைக் கண்டு, மலேசிய அரசு அதிகாரிகள் வியந்து போனார்கள். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனதால், ஒருக்கட்டத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் போதவில்லையோ என்றும் அஞ்சும் அளவுக்கு நிலைமை சென்றது குறிப்பிடத்தக்கது.

Related posts