TamilSaaga

7 கோடி ஜாக்பாட்டை தட்டிச்சென்ற இந்தியர் – புத்தக கடை வைத்திருந்தவரின் வாழ்க்கையை ஒரே நாளில் உச்சிக்கு கொண்டுச் சென்ற மெகா பரிசு!

லாட்டரி என்பது எப்போதும் வெகுஜன மக்களின் ஒரு தீராத கனவாகவே உள்ளது என்று கூறலாம். மோசடி செய்யாமல், ஒருவரை ஏமாற்றாமல், துரோகம் செய்யாமல்.. அதே சமயம் உழைப்பும் இல்லாமல் திடீரென ஒருவரை உச்சாணிக்கு கொண்டுச் செல்வது லாட்டரி பரிசு மட்டும் தான்.

ஆனால்… இதற்கு கிலோ கணக்கில் மச்சம் தேவை. ஏக்கர் கணக்கில் அதிர்ஷ்டம் தேவை.. ஆயிரக்கணக்கானோர் வாங்கும் லாட்டரிகளில், அந்த மச்சக்காரருக்கே… அந்த அதிர்ஷ்டசாலிக்கே பரிசு கிட்டும். என்றாவது ஒருநாள் நாம் அந்த அதிர்ஷ்டக்காரனாக இருந்துவிடமாட்டோமா என்ற தீராத பசியே லாட்டரி மோகத்திற்கான காரணம்.

நமது சிங்கப்பூரில், வாராவாரம் தவறாமல் வருடக்கணக்கில் லாட்டரி வாங்குபவர்களின் எண்ணிக்கை சர்வசாதாரணமாக ஆயிரங்களை தாண்டும். இதே நிலைமை தான் அமீரகத்திலும். அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பலரும் தவறாமல் ஒவ்வொரு முறையும் லாட்டரி வாங்குகின்றனர்.

அந்த வகையில், துபாயில் சமீபத்தில் நடந்த Dubai Duty Free குலுக்கல் போட்டியில் 63 வயதான துபாயைச் சேர்ந்த இந்திய புத்தகக் கடை உரிமையாளர் ஒரு மில்லியன் டாலர்… அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7,98,71,800 பரிசை வென்று அசத்தியுள்ளார்.

டிராவில் வெற்றி பெற்ற Rehoboth Daniel என்ற அந்த 63 வயது நபர், அதிர்ஷ்ட டிக்கெட் எண் 1002ஐ வாங்கிய பிறகு மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 394ல் ஒரு மில்லியன் டாலர்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெஹோபோத் டேனியல் கடந்த 20 ஆண்டுகளாக மில்லினியம் மில்லியனர் குலுக்கலில் தொடர்ந்து பங்கேற்பவர் என்றும் கூறப்படுகிறது.

“இந்த அற்புதமான வாய்ப்புக்கு நான் Dubai Duty Free இஸ்தாபனத்துக்கு நன்றி கூற விரும்புகிறேன்” என்றார் டேனியல். 1999ல் மில்லினியம் மில்லியனர் ஷோ தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு மில்லியன் டாலர்களை வென்ற 193வது இந்தியர் டேனியல் ஆவார்.

மேலும் துபாயில் வசிக்கும் 41 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஞ்சீவ் சர்மா, அவரது டிக்கெட் எண். ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 505ல் 0668 அவருக்கு ஒரு ஸ்போர்ட்டியான BMW F 850 ​​GS மோட்டார் பைக் கிடைத்துள்ளது.

துபாயில் மில்லினியம் மில்லியனர் துபாய் டியூட்டி-ஃப்ரீ டிக்கெட்டுகளை வாங்குபவர்களில் இந்தியர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

Related posts