ஸ்கேட்டிங் என்பது ஒரு வகையான சறுக்கு விளையாட்டு, ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஸ்கேட்டிங் பணிப் பிரதேசங்களில் சறுக்கி விளையாடுவதாக இருந்தது. பின்னர் பல வகையான ஸ்கேட்டிங் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த ஸ்கேட்டிங் சாகசம் முதன்முதலாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்கேட்டிங் விளையாட்டு ஒரு சாகச விளையாட்டாகவே கருதப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், குழந்தைகள் மிகவும் ஆர்வமாக ஸ்கேட்டிங் விளையாட்டை கற்றுக் கொள்கின்றனர். இதில் பல்வேறு வகையான தரவரிசை இருக்கிறது. ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் முதலில் ஷூஸ் ஸ்கேட்டிங்கை கற்றுக் கொள்ள வேண்டும். ஷூஸ் ஸ்கேட்டிங், ரோலர் ஸ்கேட்டிங், ஐஸ் ஸ்கேட்டிங் என இதில் பல வகைகள் உண்டு.
நாளுக்கு நாள் ஸ்கேட்டிங் செய்வதில் பலருக்கு ஆர்வம் அதிகமாக, இதை விரும்பி கற்றுக் கொள்கின்றனர். இது ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சறுக்கு விளையாட்டாக இருந்தாலும் தற்போது இந்தியாவில் இது மிகவும் பிரபலமாகி வருகிறது. அதுவும் குழந்தைகளிடையே ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஸ்கேட்டிங்கில் அதிகபட்ச ரெக்கார்ட் முறியடிக்கப்பட்டு இன்னும் மேலே சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த சிறுமி ஸ்கேட்டிங்கில் ஒரு புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள தலைவன் கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயகணேசன் மற்றும் கோகிலா தம்பதியின் 7 வயது மகளான முவித்ரா ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்திருக்கிறார். ஒரு மணி நேரம் 40 நிமிடத்தில் முப்பது கிலோ மீட்டரை கடந்து யூனிகோ உலக சாதனையை படைத்திருக்கிறார்.
முவித்ரா தன்னுடைய ஸ்கேட்டிங் பயணத்தை, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள பனவடலி கிராமத்தில் இருந்து ஆரம்பித்தார். அங்கிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் சென்று, திரும்பி 15 கிலோமீட்டர் பயணித்து அதே இடத்திற்கு வந்து சேர்ந்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம், 100 நிமிடங்கள். அதாவது ஒரு மணி நேரம் 40 நிமிடத்திற்குள் 30 கிலோமீட்டர் கடந்து சாதனை படைத்திருக்கிறார். இவருடைய சாதனைக்கு உறுதுணையாக இருக்க வேண்டி சங்கரன் கோயில், டவுன் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் உள்ளூர் கிராமத்தை சேர்ந்த காவல்துறை டிராபிக்கை கட்டுப்படுத்தி அவருக்கு உதவியது.
வழி நெடுகவும் முவித்ராவுக்கு உறுதுணையாக காவல் துறையின் கார்களும், பைக்குகளும் வந்தது. தன்னுடைய பயணத்தை இந்திய தேசிய கொடியை ஏந்தி புன்னகையுடன் நிறைவு செய்தார். வெற்றிகரமாக சாதனையை முடித்தபின் உள்ளூர் அரசியல்வாதிகள் வந்து வாழ்த்தி, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது போன்று பலர் தங்களுடைய தனித்திறன்களை வளர்த்துக்கொண்டு, நம்முடைய இந்திய நாட்டிற்கு பெருமை தேடித் தர வேண்டும்.