சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த செஸ் சாம்பியன்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்வு தான் “44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி”. நேற்று வியாழன் அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த மெகா நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள சிறந்த செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப விழாவில் பங்கேற்றனர். மேலும் நேற்று நடந்த கலை நிகழ்ச்சிகளை கமல்ஹாசன் அவர்கள் குரல் கொடுத்து தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல வெளிநாட்டவர்களையும் உள்ளூர் மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஒரு நிகழ்வு தான் லிடியன் நாதஸ்வரம் என்ற இளைஞரின் இசை விருந்து. உலக அரங்கில் லிடியானுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழரான இவர் ஒரே நேரத்தில் இரு வேறு பியானோக்களில் இரு வேறு இசையை கண்களை மூடிக்கொண்டு வசிக்கும் திறன்கொண்டவர்.
லிடியன் தனது பியானோவில் ஹாரி பாட்டர் மற்றும் மிஷன் இம்பாசிபிள் ஆகியவற்றின் தீம் பாடல்கள் உட்பட பல பாடல்களை வாசித்தார். அந்த அரங்கத்தில் இருந்த அனைவரையும் அவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் என்றால் அது மிகையல்ல.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் கரகோஷங்களை எழுப்பி லிடியனை உற்சாகப்படுத்தினார். உள்ளுர் பிரபலங்கள் மட்டுமின்றி உலக அளவில் புகழ் பெற்ற பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் அவர்கள் அனைவரும் லிடியானை வியந்து பாராட்டினார்.