இன்று தமிழகத்தின் சென்னை மற்றும் ஆந்திராவுக்கு அருகே வங்கக் கடலில் சுமார் 5.1 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளது. இதனால் சென்னையின் பல இடங்களில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள தமிழ்நாட்டின் வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் “வங்காள விரிகுடா கடலில் சுமார் 320 கிலோ மீட்டர் தூரத்தில் சென்னை ஆந்திரா கடற்பகுதியில் ரிக்டர் அளவில் 5.1 அளவில் லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும்.
கடலில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நில அதிர்வுகள் ஏற்கனவே சென்னையில் உண்டாகி உள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி இதேபோல 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்றும். 2016ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாகவும்.
2015ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி 7.3 ரிக்டர் அளவில் பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சென்னைக்கு சுனாமி வர வாய்ப்பு இருக்கிறதா? என்று மக்கள் பலரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், இது ஒரு லேசான நில அதிர்வு மட்டுமே ஆகையால் சுனாமி வர வாய்ப்பில்லை என்றும் ஜான் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறுஞ்செய்திகள் மூலமும் வாட்ஸ்அப் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.