TamilSaaga

சிங்கப்பூரில் 3 மணி நேரம் பெய்த கனமழை : பல இடங்களில் போக்குவரத்தில் சிக்கல்

மேற்கு சிங்கப்பூரில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (ஆகஸ்ட் 24) சுமார் மூன்று மணி நேரம் விடாமல் பெய்த அதிக கன மழையால், இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட மழையை விட அதிக அளவு மழை பதிவாகி உள்ளது. புக்கிட் பஞ்சாங் சாலை மழை நிலையத்தில் தான் அதிக மழை பதிவாகியுள்ளதாக தேசிய நீர் நிறுவனம் PUB தெரிவித்துள்ளது. அங்கு காலை 7.50 முதல் 10.40 வரை சுமார் 159.8 மிமீ மழை பெய்துள்ளது.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூரின் சராசரி மாதாந்திர மழையில் இது 109 சதவிகிதம் ஆகும். நாட்டின் சில பகுதிகளில் வடிகால்கள் மற்றும் கால்வாய்களில் நீர் நிலைகள் 90 சதவிகிதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. மேல் புக்கிட் திமா பகுதி, உட்லேண்ட்ஸ் மற்றும் சன்செட் டிரைவ் உள்ளிட்ட பகுதிளில் பலத்த மழை காரணமாக பல இடங்களுக்கு PUB வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது.

சிங்கப்பூரில் காலை 10.08 மணிக்கு சிம் டார்பியிலிருந்து பிஞ்சாய் பூங்காவிற்கு செல்லும் டுனெர்ன் சாலையில் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சாலைகளில் மக்கள் வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

வானிலை மையம் சிங்கப்பூர் இந்த மாத தொடக்கத்தில் ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் அதிக இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் வடக்கு மற்றும் தெற்கிலிருந்து வீசும் காற்றின் மோதலால் கடந்த வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts