TamilSaaga

டிம் டேவிட் – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வலியும் மருந்தும் இந்த “சிங்கப்பூர் சிங்கம்” தான்!

டிம் டேவிட் – மும்பை இந்தியன்ஸ் அணியை மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியிருக்கிறார். தொடரின் ஆரம்ப கட்டத்தில் சுமாராக பேட்டிங் செய்ததால் அந்த அணியை இக்கட்டில் தள்ளியவர், இப்போது கடைசி கட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிறார். வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால், அதுவே உண்மை. மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத்தை நோக்கிய திட்டமிடலில் பெரும் குழப்பமாக இருக்கப்போவது இந்த சிங்கப்பூர் சூப்பர் ஸ்டார் தான்!

இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பு நடந்த ஏலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிர்பார்த்ததைப் போல் அமையவில்லை. இஷன் கிஷனை தக்கவைக்க பல நட்சத்திர வீரர்களைத் தியாகம் செய்ய வேண்டியதாக இருந்தது. முதல் நாள் நட்சத்திர வெளிநாட்டு வீரர்களை அவர்களால் வாங்க முடியவில்லை. இரண்டாம் நாள் ஜோஃப்ரா ஆர்ச்சர், டிம் டேவிட் ஆகியோரை பெரும் தொகை கொடுத்து வாங்கினர். 8.25 கோடி ரூபாய் கொடுத்து டிம் டேவிட் வாங்கப்பட்டார். ஆனால், முதலிரு போட்டிகள் அவர் நினைத்ததைப் போல் செல்லவில்லை.

இரண்டு ஆட்டங்களிலும் சேர்த்தே 13 ரன்கள் தான் எடுத்தார் டேவிட். அதனால், அடுத்த 4 போட்டிகளிலும் வெளியே உட்காரவைக்கப்பட்டார். அவ்வளவுதான் டேவிட்டின் ஐபிஎல் சீசன் முடிவுக்கு வந்துவிட்டது என்று எல்லோரும் நினைத்தார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியும் தொடர்ந்து சொதப்பி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்ததால், ‘இனி இளைஞர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். டேவிட்டின் சீசன் அவ்வளவுதான்’ என்றார்கள்.

இன்னும் சிலரோ, அடுத்த சீசனுக்கு முன்பாக அவரை மும்பை அணி ரிலீஸ் செய்துவிடும் கூறினார்கள். அதற்கான காரணங்களும் இருக்கவே செய்தன. மும்பை இந்தியன்ஸில் அணியில் வெளிநாட்டு வீரர்கள் யாரும் சரியாக செயல்படாததால், அடுத்த ஆண்டு நடக்கப்போகும் மினி ஏலத்துக்கு முன்பு பல மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போதிருக்கும் பல வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டு, ஒருசில டாப் ஸ்டார்கள் வாங்கப்படலாம் என்று கருதப்பட்டது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் ஒரு “தீப்பொறி திருமுகம்”.. வீட்டில் வெடிகுண்டுகளை தயாரித்த பொறியியல் மாணவர்.. ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் வெடிக்கச் செய்தது அம்பலம்

பெர்சனல் காரணங்களுக்காக இந்தத் தொடரில் பங்கேற்காத பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலிய வேகம் மிட்செல் ஸ்டார்க், ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷான், வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் என பல முன்னணி வீரர்கள் அடுத்த ஏலத்தில் பங்கேற்கக்கூடும். அவர்களுள் இரண்டு அல்லது மூன்று பேரையாவது மும்பை அணி வாங்க நினைக்கும். அதற்கான தொகையை, வீரர்களை ரிலீஸ் செய்வது மூலம் தான் திரட்ட முடியும். டேவிட்டின் தொகை 8.25 கோடி ரூபாய் என்பதால், அவரை ரிலீஸ் செய்வது அடுத்த ஏலத்துக்கு பெரிய அளவு மும்பைக்கு உதவும் என்று சொல்லப்பட்டது. ஆனால், டேவிட் ஹேட் அதர் ஐடியாஸ்!

எந்த ஒரு சாம்பியன் வீரரின் திறமையுமே பாதாளத்திலிருந்து எப்படி அவர்கள் மேலே எழுந்து வருகிறார்கள் என்பதில் தான் தெரியும். முடியாது என்று அனைவரும் சொல்வதை முடித்துக்காட்டுவதில்தான் இருக்கிறது. கோலியாத்துகளை வீழ்த்துபவர்கள்தானே டேவிட்! இவரும் முடியாது என்று நினைக்கப்பட்டதை முடித்துக்காட்டத் தயாரானார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டார் டிம் டேவிட்.161 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் நடுவே வெற்றியை நழுவவிட்டிடுமோ என்று கருதப்பட்டது. அணியின் நம்பிக்கை நாயகன் கரண் பொல்லார்ட் ஒருபக்கம் தடுமாறிக்கொண்டிருந்தார். அவர் அடித்தது 14 பந்துகளுக்கு வெறும் 10 ரன்கள் தான். ஆனால், போட்டியை மும்பை தோற்றுவிடாமல் இருக்க டிம் டேவிட் காரணமாக அமைந்தார். அதிரடியாக ஆடிய அவர் ஒன்பதே பந்துகளில் 20 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் 8 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றியை ருசித்தது.

அடுத்த ஆட்டம் இன்னும் வேறு லெவல். குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை டெத் ஓவரில் பிரித்து மேய்ந்த டேவிட், 21 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதனால், மும்பை 177 ரன்கள் விளாசிய மும்பை இந்தியன்ஸ், 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அல்சாரி ஜோசஃப், முகமது ஷமி, லாகி ஃபெர்குசன் என அந்த அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரின் ஓவர்களிலும் சிக்ஸர்கள் விளாசினார். ஆட்ட நாயகன் விருதையும் அவரே வென்றார்!

கொல்கத்தாவுக்கு எதிராக 13 ரன்களுக்கு அவுட் ஆகியிருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்திலோ தனி ஆளாக போட்டியை மாற்றியிருப்பார். 194 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் நடுவே வழக்கம்போல் தடுமாறத் தொடங்கியது. ஆனால், டேவிட்டின் விஸ்வரூபம் ஆரஞ்ச் ஆர்மியை ஆட்டிப்படைத்தது. 18 பந்துகளில்… பதினெட்டே பந்துகளில் 46 ரன்கள் குவித்து மிரட்டினார். ‘யார்க்கர் கிங்’ நடராஜன் வீசிய ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசி, அந்த ஒரு ஓவரிலேயே மும்பையை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தார். ஆனால், கடைசிப் பந்தில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆகி வெளியேறினார் டேவிட். அவரோடு சேர்ந்து மும்பையின் வெற்றி வாய்ப்பும் வெளியேறியது!

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வேலைத் தேடி.. வடிகால் வழியாக ஊர்ந்து சென்றே கட்டுமானத் தளத்திற்குள் நுழைந்த நபர் – வசமாக சிக்கிய சம்பவம்

இப்படி, இந்த சீசனில் தனக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பை மிகக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு துத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது இந்த சிங்கப்பூர் சிங்கம். இத்தனைக்கும் அவர் தொடக்கத்தில் தடுமாறியபோது, ‘அவர் மற்ற டி-20 தொடர்களில் சிறப்பாக ஆடியிருக்கலாம். ஆனால், இந்திய ஆடுகளங்கள் அப்படியில்லை. இங்கு சுழற்பந்துவீச்சை அவரால் எதிர்கொள்ள முடியாது. அதனால்தான் தடுமாறுகிறார்’ என்றெல்லாம் விமர்சித்தார்கள். ஆனால், அதையும் சிறப்பாக கையாண்டுகொண்டிருக்கிறார் டேவிட். யுஸ்வேந்திர சஹால், மொயீன் அலி என பந்தை அதீதமாக சுழலச் செய்யும் பௌலர்களின் பந்துவீச்சிலும் சிக்ஸர் விளாசியிருக்கிறார் டேவிட்.

இப்போது அசுர ஃபார்மில் இருக்கும் டிம் டேவிட் இந்த சீசன் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். ஆனால், எல்லோரும் சொன்னதைப் போன்ற மும்பை இந்தியன்ஸின் அடுத்த சீசனுக்கான பிளானில் இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது. பொல்லார்ட் இருக்கும் ஃபார்முக்கு, டேவிட் போன்ற ஒரு ஃபினிஷரை அவர்கள் தவறவிட விரும்பமாட்டார்கள். அதேசமயம், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய பொல்லார்டை, இந்த ஒரு மோசமான சீசனுக்காக வெளியேற்றிவிட மாட்டார்கள். இப்படியிருக்கையில், அடுத்த ஏலத்துக்கு பணம் திரட்ட ஒரு சரியான ஆப்ஷன் அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்.

டேவிட்டின் சமீபத்திய ஃபார்ம், அவர் அடுத்த ஏலத்தில் இருந்தால் நிச்சயம் அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுக்கும். அப்போதும் ஓரளவு நல்ல தொகைக்கு அவர் ஏலம் போகக் கூடும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகள் ஒருசில வீரர்களை ரிலீஸ் செய்து நிச்சயம் ஸ்டார் வீரர்களை வாங்க முற்படுவார்கள். அதனால், மும்பை அணி டேவிட்டை ரிலீஸ் செய்து வேறு யாரையேனும் வாங்க முற்படுமா, டேவிட்டை இழக்குமா, இல்லை பொல்லார்ட் இடத்தில் டேவிட்டை நிறுவுமா என பல கேள்விகள் எழுந்துள்ளன. மும்பை இந்தியன்ஸிடம் இத்தனை கேள்விகள் இருந்தாலும், தன் சமீபத்திய செயல்பாட்டின் மூலம் டேவிட் சொல்லியிருக்கும் பதில் இதுதான் – I’m here to stay!

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts