TamilSaaga

விளையாட்டும் தியானமும்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டை நேசிப்பவர்களாகவே உள்ளனர். விளையாட்டு புத்துணர்வையும் மகிழ்வையும் கொடுக்கும். விளையாட பிடிக்காதவர்கள் என இவ்வுலகில் வெகு சிலரே இருப்பார்கள். இன்றைய வாழ்க்கை முறை பெரும்பான்மை மக்களை பல்வேறு நெருக்கடிகளில் சிக்க வைத்துள்ளது. நெருக்கடியான போராட்டமான வாழ்க்கை முறை மக்களை மனஉளைச்சல் மனச்சோர்வு மன அழுத்தம் என வதைத்து வருகிறது. இவ்வாறான சூழலில்தான் தியானம் செய்ய பலரும் பரிந்துரைக்கின்றனர்.

தியானமும் மூச்சுப்பயிற்சியும் மனதையும் உடலையும் அமைதிப்படுத்தி மனச்சோர்வை போக்கவல்ல சிறந்த உக்தி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால் தியானத்தில் உள்ள மிகப்பெரிய சிக்கலே, நாம் எப்பொழுது தியானத்தில் அமர்கிறோமோ அப்பொழுதுதான் எல்லா வகையான எண்ணங்களும் கண்முன்னே நிழலாடும். எண்ண ஓட்டங்களை நாம் தடுக்க முற்படாமல், அதன் போக்கில் விட்டுவிட்டு தியானத்தில் கவனம் செலுத்த வேண்டுமென சிலர் சொல்கின்றனர். எனினும் எண்ண ஓட்டங்களினூடே மனதை ஒருநிலைப்படுத்துவது இயலாது போகும். தொடர்ச்சியான கடும் பயிற்சி மனதை அமைதிப்படுத்த உதவும். ஆனால் மனதை அமைதிப்படுத்துவது மனிதர்களின் அடிப்படைப் பண்பான போராட்டப் பண்பை முனைமழுங்கச் செய்யும் ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். நமது போராட்டப் பண்பே, இந்த மனிதயினத்தை பரிணாமத்தின் உச்சத்தை தொடவைத்துள்ளது என்பதை நாம் மறந்திடலாகாது.

தியானத்தின் நோக்கமே மனதை ஒருநிலைப்படுத்துவதாகும், மனதை ஒருநிலைப்படுத்துவதன் மூலம் நமது கவனத்தை குவித்து படிக்கவும் நமது பணிகளை கவனம் சிதராமல் செய்யவும் உதவும் என்பதேயாகும். தியானத்தின்போது ஏற்படும் எண்ணச் சிதறல்களினால் தியானத்தின் நோக்கம் பெரும்பான்மை மக்களுக்கு நிறைவுறுவதில்லை. விளையாட்டு இப்படி அமைவதில்லை, விளையாடும்பொழுது விளையாடுபவரின் மனமும் உடலும் இயல்பாகவே ஒன்றிணைந்து, கவனக்குவிப்போடு விளையாட்டில் ஈடுபடுவர். தியானத்தின் பயனை விளையாட்டே இங்கு நிறைவாக தந்து விடுகிறது. விளையாட்டில் ஆர்வமில்லாதோர்க்கு விளையாட்டு கவனக்குவிப்பை தரவியலாது. இவ்வாறு விருப்பமில்லாமல் இருப்பவர்களை இனம்கண்டு, அவர்களுக்கு ஏதேனும் மனச்சோர்வோ உளச்சிக்கலோ இருக்கிறதாவென அறிந்து, அதைக் களைய உதவவேண்டும்.

கவனத்திற்கும்(attention) கவனக்குவிப்புடன்(concentration) பணி செய்வதற்கும் ஆர்வமே அடிப்படையாய் அமைகிறது என்பதே யதார்த உண்மையாகும். விருப்பத்துடன் விளையாட்டில் பங்கெடுக்கும்போது கவனமும் கவனக்குவிப்பும் சிறப்பாக வளர்த்தெடுக்கப்படுகிறது. ஒருசில பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூறுவதுபோல் ‘விளையாடினால் கவனச்சிதறல் ஏற்படுமெனவும் தியானம் செய்தால் கவனக்குவிப்பு வளரும்’ என்பதும் அனைவருக்கும் பொருந்துவதில்லை.

கவனத்திற்கும் கவனக்குவிப்பிற்கும் விளையாட்டே தியானத்தை விடவும் சிறந்த பயிற்சியாக அமைகிறது என்பதை நடைமுறை அனுபவம் நன்கு பறைசாற்றுகிறது. அனுபவவழி பயிற்சியாளராக இருக்கும் நான், இளம்பருவ மாணவர்களுக்கு விளையாட்டினூடாக அனுபவவழிப் பயிற்சி அளித்து வருகிறேன். அதில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களும் உற்சாகத்துடன் பங்கெடுக்கின்றனர். பல்வேறு விளையாட்டுக்களின் மூலமாக இம்மாணவர்கள், சேர்ந்து பழகுதல், ஒருவரையொருவர் நன்கு தெரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், வெற்றித்-தோல்வியை சமமாக அனுகுதல் போன்ற பல நேர்நிறை கற்றல்களைப் பெறுகின்றனர். கவனமும் கவனக்குவிப்பும் இம்மாணவர்களிடம் இயல்பாகவே சிறப்பாக வெளிப்படுகிறது. விளையாட்டு, மனச்சோர்வையும் கவலைகளையும் களைந்து, நமது உடலையும் மனதையும் துடிப்புடனும் உற்சாகத்துடனும் வைத்திருப்பதை இங்கு நன்கு உணர முடிகிறது.

இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உடலும் மனதும் உற்சாகத்துடனும் துடிப்புடனும் இருப்பதே, சமூகத்தின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் அடிப்படையாய் அமையும். தியானத்தின் மூலமாக நமது போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்படுவது, ஆதிக்கத்தையும் சுரண்டலையும் தட்டிக்கேட்காது பணிந்துபோகும் நிலைக்கே நம்மை தள்ளும். இன்றைய வணிகமய தாராளமய சூழலில் தியானம், ஆளும் வகுப்பின் சுரண்டலுக்கு ஏற்பிசைவாக நம்மை மாற்றியமைக்கவே அனைவருக்குமாக வலிய திணிக்கப்படுகிறது. அதேபொழுதில், தியானத்தின் மூலமாக கிடைக்கும் மன அமைதியை நாம் முற்றாக புறக்கணிப்பதும் மூடத்தனமாகவே அமையும். கடும் மனவுளைச்சலுக்கும் மனஅழுத்தத்திற்கும் உள்ளாகி, எதிலும் விருப்பமில்லாமலும் உயிர்வாழ்வதில் எதிர்மறை கண்ணோட்டம் கொண்டு, பதற்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு தேவைக்கேற்ற உளச்சிகிச்சையும் தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சியும் நல்லதொரு பயன்தரும் என்பதையும் நினைவில்கொள்ளல் வேண்டும்.

விளையாட்டையும் தியானத்தையும் பொதுமைப்படுத்தாமல், பெரும்பான்மை மக்களுக்கு விளையாட்டையும் உடலளவிலும் மனதளவிலும் நலிவுற்றோருக்கு தியானத்தையும் பகுத்துக் கொடுப்பதே சிறந்த பயனைத் தரும்.

புத்துணர்வுடன்,

ஜெ.கண்ணன்

உளசிகிச்சையாளர்
மாணவர், பதின்பருவம் & குடும்பநல ஆலோசகர்
அனுபவவழி பயிற்சியாளர்
ஓகப் பயிற்சியாளர்
மரபுவழி தமிழ் மருத்துவர்.

கைப்பேசி: 98406 84885

Related posts